உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.போப்டே 2019-ம் ஆண்டு இந்த பொறுப்புக்கு வந்தார். அவருடைய பதவி காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை செய்யும்படி தற்போதைய தலைமை நீதிபதி போப்டேவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள போப்டே தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயரை பரிந்துரை செய்திருந்தார். எஸ்.ஏ.போப்டேவின் பரிந்துரையை ஏற்று என்.வி.ரமணாவை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். அவர், ஏப்ரல் 24-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
ஆந்திராவிலிருந்து இரண்டாவது நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்கவுள்ளார். முதலில் 1966-1967-ம் ஆண்டு காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சுப்பா ராவ் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.