என்எஸ்ஓ நிறுவனம் தங்களது பெகாசஸ் உளவு மென்பொருள் விற்பனைக்காக மேற்கு வங்க அரசை தொடர்புகொண்டதாகவும் இதற்காக ரூ.25 கோடி கேட்டதாகவும் ஆனால், அதனை வாங்க மறுத்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘என்.எஸ்.ஒ. நிறுவனம் அவர்களின் மிஷின்களை எங்கள் காவல்துறையிடம் விற்பதற்காக தொடர்புகொண்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதற்காக ரூ.25 கோடி கேட்டனர். எனினும் இத்தகைய மிஷின்கள் எங்களுக்கு தேவையில்லை என்று நான் கூறிவிட்டேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாஜகவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபமடைகிறது - சோனியா காந்தி காட்டம்
தேச விரோதச் செயல்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும் இருந்திருந்தால் அது வேறு விஷயமாக இருந்திருக்கும். ஆனால் இது அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, இது அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 நாகப்பாம்பு வைத்து சாகசம் செய்ய முயன்ற நபருக்கு விபரீதம்...
தனது செல்போன் ஒட்டுகேட்கப்படுவதாக தெரிவித்த மம்தா பானர்ஜி, அடுத்தவர்களின் தனியுரிமையில் தலையிடுவதுவதையும் பேச்சுரிமையை நசுக்குவதையும் தான் நம்பவில்லை என்று கூறினார். மேலும், பாஜக ஆளும் மாநிலங்கள் பெகாசிஸ் பயன்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.