பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 230 தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அஜித் தோவல் காஷ்மீர் பகுதியில் தங்கி கள நிலவரத்தை அறிந்துவருகிறார்.
காஷ்மீரின் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவல், ‘பெரும்பாலான காஷ்மீரிகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் பிரச்னைகளை தூண்டிவிடாமல் இருப்பதற்காகத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 370-வது என்பது சிறப்பு அந்தஸ்து. அது சிறப்பு பாகுபாடு.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், காஷ்மீரிகள் இந்தியர்களுடன் இணைந்து செல்வதற்கு உதவும். காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பகுதிகளிலும் தரைவழி தொலைபேசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டத்துக்குட்பட்டே அரசியல் கட்சித் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இதுகுறித்து நீதிமன்றங்களில் முறையிட முடியும். அவர்கள் குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், இது காஷ்மீரிகளின் எண்ணம்போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையில் காஷ்மீரிகளின் மனநிலை அல்ல. பாகிஸ்தானின் திட்டங்களால் காஷ்மீர் பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநில காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் அதற்கு பயன்படுத்தப்படவில்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 230 தீவிரவாதிகள் உள்ளனர் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் கலவரங்களை உருவாக்க எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ளனர். அவர்கள் வணிகர்களையும் மக்களையும் மிரட்டி இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவிடாமல் செய்கின்றனர். காஷ்மீர் அமைதியற்ற சூழலை உருவாக்க பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே வழி தீவிரவாதம் தான். எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது’ என்று தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Article 370, Jammu and Kashmir