மேல்சாதி அரசியலைக் கையிலெடுக்கும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.| பிரதிநிதித்துவ படம்.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா கட்சிகளும் இப்போது மேல் சாதி அரசியலைக் கையிலெடுத்துள்ளன. பிராமணர்களை ஆதரிக்கும் அரசியலை அங்கு முன்னெடுத்துள்ளனர்.

 • Share this:
  மூன்று  மாநிலங்களிலும் பிராமண வகுப்பைச் சேர்ந்த மக்கள் தொகை குறைவு, பொருட்படுத்தத் தக்க எண்ணிக்கை இல்லை என்றாலும் இவர்களது வாக்கு தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிந்தாலும் இந்த 3 மாநிலத்தின் கட்சிகள் பிராமண ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் வேதம் சார்ந்த பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக சில பல திட்டங்களை இந்த அரசுகள் வகுத்து வருவதன் காரணம், இந்த சமூகத்தினர் பிற சமூகத்தினர் மீது செலுத்தும் செல்வாக்குதான் காரணம் என்று அங்குள்ள அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆனால் இவர்கள் இந்தப் பயன்களை அடைய பிராமண குலத்தில் பிறந்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், இவர்களில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர்தான். சந்திரபாபு நாயுடு அரசு மீது அதிருப்தி கொண்ட இந்தச் சமூகத்தினர் ரெட்டி சமூகத்தினருக்கு தங்கள் ஆதரவைத் தந்தனர். ஆனால் ஒய்.எஸ். ஜகன் மோகன் ரெட்டி அரசு மீது இவர்களுக்கு திருப்தி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது, காரணம், பாஜக தங்களை இந்து தர்மத்தின் ரட்சகர்களாக பிரச்சாரித்து வருகின்றனர்.

  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு பக்தி சிரத்தையான இந்துவாகவே பொதுவெளியில் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இவரது அரசில் பிராமணர்கள் இல்லையெனினும் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். நரசிம்ம ராவ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் கர்நாடகாவில் பாஜக தலைமை பிராமண சமூகத்தை கவனமாக அணுகுகிறது. ஆனால் அறிவுஜீவிகள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் நிலவுடைமைச் சமுதாய நம்பிக்கையான பிராமணர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று நினைத்து இப்போது அதற்காக கொள்கைகளை வடிவமைப்பதை விமர்சிக்கின்றனர்.

  குறிப்பாக பிராமணர்களுக்காக வேதக்கல்வியை கொண்டு வந்த ஆந்திர அரசை கடுமையாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அரசியல் விஞ்ஞானி பிரதாப் பானு மேத்தா, பிறப்பின் அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யப்படும் ஒரு விஷயத்தை ஆதரிப்பது கூடாது என்று விமர்சிக்கிறார். வேதக்கல்வி பிராமணர்களுக்கு நல்லது என்றால் அது அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

  ஆந்திராவில் 2014-ல் பிராமண நலத்துறையை அரசு உருவாக்கியது, தெலுங்கானாவில் 2017-ல் பிராமண நலத்துறை உருவாக்கப்பட்டது. இணையதளங்களையும் தொடங்கி அதில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களை பிரில்லியண்ட் என்றும் ‘பெரிய சிந்தனையாளர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளதாக அங்கு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

  இரண்டு அரசுகளுமே அதாவது ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் பிராமண சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோரின் உயர் கல்வி, தொழில் முனைப்பு, திறன் வளர்ப்பு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் நிதி உதவிகள் ஆகியவற்றை செய்து வருகின்றன. தெலுங்கானாவில் 3%க்கும் குறைவான பிராமண சமுதாய வாக்குகள் உள்ளன, ஆந்திராவில் 5% க்கும் குறைவாக இருக்கின்றனர். ஆனாலும் பிராமணர்களை திருப்தி செய்வதை இரு அரசின் முதல்வர்களும் கவனமாக எடுத்துக் கொள்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

  தெலுங்கானா பிராமின் பரிஷத் ஸ்மார்த்தா படிப்புகள் முடிந்தவுடன் ரூ. 3 லட்சம் நிதியுதவியும் ஆகமங்கள், கிரமந்தங்கள், ஞானாந்தா படிப்புகள் முடிந்தவுடன் ரூ.5 லட்சமும் நிதியுதவியாக அளித்து வருகின்றன. இதோடு ஆந்திர அரசு, இறுதிச் சடங்கு செய்ய முடியாத ஏழை குடும்பத்துக்கு யாராவது இறந்தால் அரசு நிதியுதவி அளிக்கிறது.

  இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர் தெலக்கப்பள்ளி ரவி ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, நம் சமூகத்தில் பிராமணர்கள் இன்னும் முக்கிய பங்காற்றுகின்றனர். பொருளாதார, அரசியல் அதிகாரம் இல்லை என்றாலும் ஆட்சியதிகாரம் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் கூட சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கின்றனர். அரசுக்கு ஆலோசகர்களாக பிராமணர்கள் இன்னமும் இருக்கின்றனர், உதாரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் தலைமைக் குருக்கள் ஏ.வி. ரமணா தீக்‌ஷிதலு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பெரிய செல்வாக்கு உள்ளவர், என்றார்.

  கர்நாடகா நிலவரம்:

  கர்நாடகாவில் உள்ள மக்கள் தொகையில் 4% பிராமணர்கள் உள்ளனர். கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபமாகத்தான் 9,206 நலிவடைந்த பிராமண மாணவர்களுக்கு மொத்தமாக ரூ13.77 கோடியை நேரடி பண மாற்று முறை மூலம் அனுப்பினார். சாணக்கியா நிர்வாக பயிற்சித் திட்டத்தின் கீழ் கர்நாடகா யுபிஎஸ்சி தேர்வுக்காக பிராமண சமூகத்தைச் சேர்ந்த 161 பேரை புதுடெல்லியில் உள்ள சங்கல்ப் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

  சந்தியாவந்தனம் போன்ற தினசரி சடங்குகளை ஊக்குவிக்கவும் மாணவருக்கு ரூ.500-ம் ஆசிரியருக்கு ரூ.5,000 வரையிலும் கர்நாடக அரசு செலவிடுவதாக தெரிகிறது. விஸ்வாமித்ர பிரதிபா புரஸ்கார் மூலம் 153 ஏழை பிராமண மாணவர்களின் மருத்துவப் பட்டப்படிப்புக்காக ரூ.97 லட்சம் அளிக்கத் தயாராகி வருகிறது. இதோடு பிராமணர்கள் தொழில் தொடங்க ஏதுவாக கனரா வங்கி மூலம் ரூ.20,000 முதல் ரூ.1 லட்சம் வரை ஏற்பாடு செய்யவுள்ளது.

  அரசியல் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய பத்தியில், “மதச்சார்பின்மை, சமூக நீதி என்பது இந்த மாநிலங்களில் கேலிக்கூத்தான ஒரு ஐடியாவாகியுள்ளது. அரசியலும் பொதுக்கொள்கைகளும் சாதி வாக்குகளை குறிவைத்து நடத்தப்படுகிறது. 21ம் நூற்றாண்டில் எங்காவது பார்க்க முடியுமா? பிறப்பின் அடிப்படையில் தொழிலும் கல்வியும் தீர்மானிக்கப்படுவதை?

  இது சமூக நீதியை கேலிக்குரியதாக்கும். வரலாற்று ரீதியாக, ஜாதிரீதியாக வரலாற்றில் ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி நிலைநாட்டுதல் செயல்கள், திட்டங்கள் ஆகியவற்றை பொதுப்படையான பிற்படுத்தப்பட்ட தன்மைக்கும் வறுமைத் தன்மைக்கும் ஒப்பிட்டு குழப்பலாமா” என்று கேட்கிறார்.
  Published by:Muthukumar
  First published: