• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் வழக்கை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் மிகவும் மோசமானது - உச்சநீதிமன்றம் கண்டனம்

லக்கிம்பூர் வழக்கை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் மிகவும் மோசமானது - உச்சநீதிமன்றம் கண்டனம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

லக்கிம்பூர் வழக்கை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் மிகவும் மோசமானது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனத்தை மோதச் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் 4 பாஜக-வினர் உயிரிழந்தனர்.

    வாகனத்தை ஏற்றிக் கொன்றதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நெருக்கமான இரண்டு பேர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

    இதையடுத்து, ஆஷிஷ் மிஸ்ராவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு காவல் துறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், அவர் ஆஜராகாததால், சனிக்கிழமை காலை ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இதனிடையே, லக்கிம்பூர் விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    லக்கிம்பூர் வழக்கை உத்தரப்பிரதேச அரசு கையாண்ட விதம் மிக மோசமானது என தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

    குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சரின் மகன் கைதுசெய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மற்ற கொலை வழக்குகளிலும் இதுபோன்றுதான் சம்மன் அனுப்பி குற்றவாளியை விசாரணைக்கு ஆஜராகச் சொல்வீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    அப்போது, உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, உயிரிழந்தவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயம் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்திருப்பதாகக் கூறினார்.

    இதன் காரணமாகவே, குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களை கைதுசெய்யாமல் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    இது 8 பேர் பயங்கரமாக கொலை செய்யப்பட்ட வழக்கு என்றும், அனைத்து குற்றவாளிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற மிகத் தீவிரமான குற்றச்சாட்டுக்களை ஒருவர் சந்திக்கிறார் என்றால் அவரை இப்படித்தான் அழைப்பு விடுத்து மரியாதை கொடுத்துக் கொண்டே இருப்பீர்களா... இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா? என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

    மேலும், லக்கிம்பூர் விவகாரத்தை உத்தரப்பிரதேச அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

    இந்த விவகாரத்தில், சில முக்கிய நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், சி.பி.ஐ விசாரணக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் குற்ற ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டனர்.  எந்த விசாரணை அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்றும்,  இது குறித்து உத்தரப்பிரதேச அரசு ஆலோசனை நடத்தி நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு தனது மகன் ஆஜராகவில்லை என்றும், சனிக்கிழமை ஆஜராவார் என்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனி விளக்கம் அளித்துள்ளார்.

    லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, மத்திய இணை அமைச்சர் ராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவிநீக்கம் செய்யாவிட்டாலோ, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படும் என்று கூறினார்.

    இதனிடையே, சிஎன்என்-நியூஸ் 18-க்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்கிம்பூருக்கு சுயநலனுக்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சென்றதாகவும், விசாரணையின்போது, உண்மை வெளிவரும் என்றும் கூறினார். குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: