மாநில கட்சிகளுடன் இணைவதில் தயக்கம் காட்டியதே காங்கிரசின் தோல்விக்காக முக்கிய காரணம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அவரது விருப்பத்தை எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஏற்கவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளன.மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கைகோர்க்க தவறியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

மத்தியில் அடுத்த ஆட்சி அமைக்கும் முயற்சியை முதலில் கையில் எடுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இடம்பெறாத எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இவருடன் முதலில் கைகோர்த்திருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியதை விரும்பாமல் பின்வாங்கினார். அதே நேரத்தில், சந்திரபாபு நாயுடு பிரதமர் கனவில் இருந்ததால் ஆந்திராவில் அவரது தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் போட்டியிடாமல் தனித்து நின்றது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி


80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் எலியும், பூனையும் ஆக இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து இத்தேர்தலில் மகாபந்தன் என்ற பெயரில் போட்டியிட்டன.

இவர்கள் தங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்க்க மறுத்துவிட்டன. சோனியா, ராகுல் உள்ளிட்டோர் போட்டியிடும் மூன்று தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என அறிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சி, பிரியங்காவை பிரசார களத்தில் இறக்கி தனித்து போட்டியிட்டது.

இதன் காரணமாக, பிரசாரத்தின் போது காங்கிரசை அகிலேஷும் மாயாவதியும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அத்துடன், மகாபந்தன் அணி வெற்றி பெற்றால், மாயாவதி தான் பிரதமர் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது.

அதே போல், மேற்கு வங்க மாநிலத்திலும் திரிணாமூல் காங்கிரசுடன் கைகோர்க்காமல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இவ்வாறு மாநிலங்களில் அதிக வாக்கு வங்கி கொண்ட தெலுங்கு தேசம், மகாபந்தன் கூட்டணியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமூல் ஆகிய மாநிலக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் காங்கிரஸ் தனித்து நின்றது.

அந்த சமயத்தில், யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அவரது விருப்பத்தை எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் ஏற்கவில்லை.

சந்திரபாபு நாயுடு.


முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு சந்திரபாபு நாயுடு மீண்டும் களத்தில் இறங்கி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். அவருடன் ஆலோசித்த தேவகவுடா தவிர மற்றவர்கள் அனைவரும் ராகுலை பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். எதுவாக இருந்தாலும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தையும் சந்திரபாபுவிடம் மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்டோர் முன்வைத்தனர்.

இவ்வாறு பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் ஒன்றுபட்ட அணி அமைக்காததன் காரணமாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளன. மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கைகோர்க்க தவறியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் பார்க்க..

பாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பெண்


தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Sivaranjani E
First published: