மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவற்றுக்கான அமைச்சகம் வேறு நாடுகளில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வளர்ப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. இதற்கு எதிராக பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், மத்திய அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனக் கூறி பொது நல மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எக்ஸோடிக் உயிரினங்கள் என்பவை தங்கள் வசிப்பிடங்கள் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வளர்க்கப்படுவன. அன்மையில் கோவிட் தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் வனவிலங்கு வர்த்தகம் மற்றும் விலங்கு மூலம் பரவும் நோய் குறித்த அச்சம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. கஸ்டம்ஸ் சட்டங்களின் அடிப்படையில் தான் இந்த வன விலங்குகள் இறக்குமதி, வர்த்தகம் நடைபெறுகின்றன.
இந்த சூழலில், வெளிநாடுகளில் இருந்து விலங்குகளை இறக்குமதி செய்து அவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தொடர்பாக கடுமையான விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் வகுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்
இந்த புதிய வழிகாட்டுதலின் படி
புதிய உத்தரவானது, வனவிலங்குகள் வர்த்தகத்தை நிர்வகிக்கும் செய்யும் சர்வதேச அமைப்பான CITES அமைப்பின் கீழ் உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். அதேவேளை 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களுக்கு இது பொருந்தாது.
இந்த புதிய உத்தரவின் படி, வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் விலங்குகளின் விவரத்தை தமாக முன்வந்து தெரிவிக்கலாம். அவர்களின் விலங்குகள் முறையாக பதிவு செய்யபப்ட்டு, மேற்படி ஏற்றுமதி மற்றும் விற்பனைக்கு வழிவகை செய்யப்படும்.
இந்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டு முதல் ஆறு மாத காலத்தில் வாங்கிய வெளிநாட்டு விலங்குகளுக்கு உரிமையாளர்கள் ஆவணங்கள் சமர்பிக்கத் தேவையில்லை. வழிகாட்டுதல் வழங்கி ஆறு மாதங்களுக்குப் பின் பதிவு செய்யும் நபர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
இதன் மூலம் வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் உரிய பரமாரிப்பு மேற்கொள்வதற்கும், மற்ற பாதுகாப்பு அம்சங்களை முறையாக பேனுவதற்கும் சிறந்த சூழல் உருவாக்கப்படும். மேலும், விலங்குகளின் முழு தரவுகள் அரசிடம் இருக்கும் பட்சத்தில், விலங்குகள் மூலம் நோய்கள் பரவும் காலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நலனை பாதுகாக்க வழிகாட்டுதல்கள் வழங்குவது எளிதாக இருக்கும்.
உரிமையாளர் தனது வளர்க்கும் விலங்கின் விவரத்தை பதிவு செய்தப் பின், மாநிலத்தின் தலைமை வனத்துறை வார்டன் நேரில் வந்து விலங்கை சரிபார்ப்பார்.பின்னர் பதிவு செய்யப்பட்டதற்கான அவணம் உரிமையாளருக்கு வழங்கப்படும். மேலும், விலங்கை ஆய்வு செய்வதற்கு வனத்துறை வார்டன் அல்லது அதிகாரிகளுக்கு எப்போதும் அதிகாரம் உண்டு. அதேபோல், விலங்கை விற்றாலோ, அது உயிரிழந்தாலோ அல்லது உரிமையாளரை மாற்றினலோ, இது தொடர்பான தகவலை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வார்டனுக்கு தெரிவிக்க வேண்டும்.
இனி வரும் காலத்தில் எந்த நபராவது வெளிநாட்டு விலங்கை இறக்குமதி செய்து வளர்க்க விரும்பினால், அவர்கள் வெளிநாட்டு வர்த்த இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய வகையில் உரிமம் பெற வேண்டும்.மேலும், தனது விண்ணப்ப படிவத்தை காட்டி மாநில வனத்துறை வார்டனிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.