நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு நிறைவைக் கொண்டாட பாஜக தயாராகி வருகிறது. இதற்காக தொடர்ச்சியான மக்கள் தொடர்புத் திட்டங்களை செயல்படுத்துவது என மும்மூரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மணிப்பூர் முதலமைச்சரும், பாஜக தலைவருமான பிரேன் சிங், வடகிழக்கு மாநிலங்களில் மோடி அரசின் தாக்கம் மற்றும் பிரதமருடனான தனிப்பட்ட தொடர்புகள் குறித்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது, அவரிடம் பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி ஒரு வித்தியாசமான தலைவர், நான் பாஜகவுக்கு வருவதற்கு முன்பு மற்ற தலைவர்களுடன் பணியாற்றியிருந்தாலும், மோடி வித்தியாசமானவர். அவர் மிகவும் கூர்மையானவர், பல யோசனைகளை உருவாக்கி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக அவர் செயல்படவில்லை. மோடியின் சிந்தனை சாமானிய மக்களுக்கானது என்றார்.
2014க்குப் பிறகு கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மிக நல்ல கேள்வி. ஒரு வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவன் என்ற முறையில் நான் முன்பு உணர்ந்ததையும் இப்போது என்ன உணர்கிறேன் என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மோடிக்கு முன் இந்தியர்களால் நாங்கள் கேவலமாகப் பார்க்கப்பட்டோம்.
நாங்கள் மத்திய அரசிடம் ஏதாவது சொல்ல விரும்பினால், எங்களுக்கு இன்று வழங்கப்படுவது போல் வாய்ப்புகள் அப்போது வழங்கப்படவில்லை. இன்று, நான் டெல்லிக்குச் செல்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு எது தேவையோ, அதற்கு எல்லோரும் உதவ தயாராக இருக்கிறார்கள்.
உதாரணமாக, 2017-ல் ஆட்சி அமைந்த உடனேயே நான் அங்கு இருந்தேன். அந்த நேரத்தில், நான் ரூ.3,500 கோடி அளவிலான திட்டங்களை முன்மொழிந்தேன். மணிப்பூர் போன்ற மாநிலத்திற்கு ரூ.3,500 கோடி என்பது ஒரு பெரிய தொகை. அதனை மத்திய அரசு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வாரத்தில், எங்களுக்கு திட்டத்திற்கான அனுமதி கிடைத்தது, ஏழு மாதங்களில் திட்டம் தொடங்கப்பட்டது என்றார்.
வடகிழக்கு மாநிலங்களுக்கான முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இப்போது நாங்கள் இந்தியர்கள் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், முன்பு நாங்கள் முறையாக நடத்தப்படவில்லை. முன்பு இருந்த மத்திய அமைச்சர்களின் உடல் மொழி, அவர்கள் எங்களை இழிவாகப் பார்ப்பதை தெளிவாகப் பிரதிபலித்தது. ஆனால், இப்போது அது முற்றிலும் வேறுபட்டது.
மோடி வடகிழக்கை தனது குடும்பமாக கருதுகிறார். கடந்த ஏழெட்டு ஆண்டுகளில், மோடி 50க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். பிரதமராக இருந்தும், பலமுறை சென்று வருவதும், அவரது கேபினட் அமைச்சர்கள், மாறி மாறி தினமும் வந்து, என்ன தேவை எனக் கேட்பதும், நாம் ஒரு குடும்பம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
பிரதமர் மோடியை குறித்து உங்களில் நினைவில் உள்ள சுவாரஸ்யமான சம்பவம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், வடகிழக்கு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். மணிப்பூரின் கலாச்சாரத்தை அவர் கவனித்துக் கொண்டார். (leirum phee) பாரம்பரிய மணிப்பூரி துண்டு குறித்து உங்களுக்குத் தெரியுமா? நான் டெல்லிக்குப் போய் அவருக்கு லீரம் ஃபீ பரிசளித்தபோது, ‘சார், இது பிரபலமான விஷயம்’ என்று சொன்னேன்.
கங்கையில் புனித நீராடும் போது இதை நீங்கள் அணிந்திருப்பதைக் கண்டோம் என்றேன். அதற்கு பிரதமர், எங்கள் லீரம் பீ பற்றி அவருக்குத் தெரியும் என்றும் இது இந்தியாவின் பெருமைக்குரிய கலாச்சாரம் என்றும் அவர் என்னிடம் கூறினார். மிகவும் நன்றாக இருக்கிறது என்றார். நான் பெருமையாக உணர்ந்தேன். அதன் பின்பு, மணிப்பூரின் விளையாட்டு வீரர்களை அவர் பாராட்டிய விதம், அருமை. அவர் தொலைநோக்கு பார்வையுடையவர், அவர் வித்தியாசமானவர் என்று கூறினார்.
நெருக்கடியான சூழ்நிலையில் மூத்தவராக அவர் எப்படி செயல்பட்டார்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மணிப்பூர் மாநிலம் அளவில் மிக சிறியது என்றாலும் சிக்கலானது. நான் முக்கியமான பிரச்சினைகளை கையாளும்போது, அவர் நான் சொல்வதைக் கேட்டு எங்களை வழிநடத்துகிறார். ஒருமுறை ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. நான் அதைப் பற்றி அவரிடம் சொன்னேன், அவர் பொறுமையாகக் கேட்டார். அவர் என்னிடம், ‘பிரேன், உங்கள் கோரிக்கை சரிதான்.’ அமித் ஷாவிடம் பேசவும் அவர் எனக்கு வழிகாட்டுவார் என்றார். பிறகு நான் அமித் ஜியிடம் சென்றேன். இது ஒரு குடும்பம் போன்றது என்றார்.
மோடி அரசை எப்படி மதிப்பீடுகிறீர்கள்? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நூறு சதவீதத்திற்கும் மேல். நீங்கள் வடகிழக்கு மாநிலத்திலும், தேசத்திலும் மாற்றங்களை காண்கிறீர்கள். மணிப்பூர் எப்படி மாறிவிட்டது என்று பாருங்கள், தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் இங்கு மட்டுமே உள்ளது. மணிப்பூரின் தியாகிகள் அந்தமானில் கௌரவிக்கப்பட்டனர். மணிப்பூரிகளின் உணர்வுகளைத் தொட்டவர். அவர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற தகுதியானவர். முன்பு அவமதிக்கப்பட்டோம், ஆனால் இப்போது அவரால் இந்தியர்கள் என்று பெருமைப்படுகிறோம்.
பிரதமருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பிரதமர் மற்றும் அவரது குழுவினரை நான் உண்மையிலேயே பாராட்டவும், கௌரவிக்கவும் விரும்புகிறேன். மோடி போன்ற தலைவர்கள் கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக நீடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். சர்வதேச அளவில் எங்களை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் அவர்தான். அவர் பிரதமராக தொடர்ந்தால், நம் தேசம் உலகின் உச்சத்தில் இருக்கும் என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.