கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திணறும் வடமாநிலங்கள்: மோடியுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை

மேற்கு வங்க வெள்ளம்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வடமாநிலங்கள் திணறிவருகின்றன.

 • Share this:
  கனமழை காரணமாக மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார்.

  மேற்கு வங்கம் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால், மெதினாபூர், ஹூக்ளி, ஹவுரா உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன.

  இதனிடையே, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹவுரா மாவட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

  இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உடன் வெள்ள பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை தொடர்ந்து வரும் சூழலில், கோட்டா மாவட்டத்தின் இதாவா பகுதியில், 40 பேருடன் சென்ற பேருந்து வெள்ளநீரில் சிக்கிக்கொண்டது. பின்னர் விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் போராடி அனைவரையும் மீட்டனர்

  மத்திய பிரதேச மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 240 கிராமங்களில் சுமார் 6,000 பேர் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், நஹன் - குமார்ஹத்தி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: