பாஜக வளர்ச்சிக்கு மட்டுமே வேலை செய்வேன், ஆளுநர் உட்பட எந்த பதவியையும் நான் கேட்க வில்லை என எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது. ஜூலை 26-ம் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பாஜக தலைவர்களுக்கு 75 வயதில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வந்த நிலையில் 76 வயதான எடியூரப்பாவுக்கு அதில் இருந்து விலக்கு அளித்து அவரை முதலமைச்சர் அரியணையில் அமர வைத்தது பாஜக மேலிடம்.
அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக்கொண்டார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து தனது பதவியை அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “ இரண்டு ஆண்டுகள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நன்றி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே ராஜினாமா கொடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்று இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு பெரும் நிலையில் மன நிறைவோடு ராஜினாமா செய்திருக்கிறேன்.
டெல்லி தலைமை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன். மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பதவி விலகினேன். கர்நாடகாவில் மீண்டும் பாஜக பதவிக்கு வரவேண்டும் கட்சி வளர்ச்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.அடுத்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற உழைப்பேன். அடுத்த முதல்வர் யார் என நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது ஆனாலும் நான் போகவில்லை. இனிவரும் காலங்களில் ஆளுநர் ஆகும் திட்டமும் இல்லை. கடைசி வரை கட்சி வளர்சிக்காக உழைப்பேன். கட்சி வளர்சிக்கு மட்டுமே வேலை செய்வேன் ஆளுநர் உட்பட எந்த பதவியையும் நான் கேட்க வில்லை.” என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.