மேற்குவங்கத்தில் மண் குடிசை வீட்டில் வசிக்கும் பாஜகவின் ஏழை வேட்பாளர்!

சந்தனா பவுரி

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே டிவியில் ஒளிபரப்பான பின்னர் அண்டை வீட்டார் சொல்லித்தான் தெரியும் என கூறுகிறார் சந்தனா பவுரி.

  • Share this:
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மண் குடிசை வீட்டில், குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் ஏழை பெண் ஒருவர் பாஜக சார்பில் களமிறங்கி இருக்கிறார். இவரே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளராக விளங்குகிறார்.

பொதுவாகவே தேர்தல் என்றாலே கோடிகள் புரளும் ஒரு ஜனநாயக திருவிழாவாக வர்ணிக்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கலில் தொடங்கி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் என பணம் தண்ணீராக செலவழிக்கப்படும். நிலைமை இப்படியிருக்க மண் குடிசை வீட்டில், குடிநீர், கழிப்பறை என எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி ஏழை பெண்மணி ஒருவர் மேற்குவங்கத்தில் பிரதானமாக விளங்கும் பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

மேற்குவங்கத்தின் பங்குரா மாவட்டத்தில் உள்ள சல்தோரா தொகுதியில் பாஜக சார்பாக களமிறங்குகிறார் சந்தனா பவுரி எனும் பெண்மணி. இவரே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளராக அறியப்படுகிறார். வேட்பு மனுவில் சந்தனா பவுரி குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவருடைய அசையா சொத்துகளின் மதிப்பு 31,975 ரூபாய் தான். அவரின் வீட்டில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை. அவருடைய வீட்டில் இரண்டு சிறிய அறைகள், அதில் ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேசை, ஒரு ஃபேன், மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட ஒரு படுக்கை மற்றும் பள்ளி புத்தகங்கள் உள்ளன.

சந்தனா பவுரியின் வீட்டில் 3 ஆடுகள், 3 மாடுகள் (இதில் ஒரு மாடு திருமண சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது) மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகை உள்ளன

சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் பவுடியின் அசையா சொத்துகளின் மதிப்பு 30,311 ரூபாய் தானாம். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் சந்தனா பவுரி தனது வங்கிக் கணக்கில் 8,335 ரூபாயும், கணவரின் வங்கிக் கணக்கில் 1,561 ரூபாயும் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கிறார்.

சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் கட்டிட வேலை பார்ப்பவர். தினக்கூலியாக 400 ரூபாய் பெற்றுவருகிறார். அதிலும் மழை காலங்களில் இந்த வருமானம் கூட அக்குடும்பத்திற்கு கிடைக்காதாம்.

சல்தோரா தொகுதியானது பட்டியலின ஒதுக்கீட்டில் உள்ள தொகுதியாகும். முதலில் தான் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே டிவியில் ஒளிபரப்பான பின்னர் அண்டை வீட்டார் சொல்லித்தான் தெரியும் என கூறினார் சந்தனா பவுரி

சந்தனா பவுரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவருடைய தந்தை காலமாகிவிட அவரை இள வயதிலேயே திருமணம் முடித்து கொடுத்திருக்கின்றனர். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை என்றும் தான் எம்.எல்.ஏவாக தேர்வானால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
Published by:Arun
First published: