பள்ளி ஆசிரியர்களை, அவர்களின் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், "சார்" அல்லது "மேடம்" என்பதற்குப் பதிலாக "ஆசிரியர்" / “டீச்சர் “ என்று அழைக்கப்பட வேண்டும் என்று கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (KSCPCR) அறிவுறுத்தியுள்ளது.
சமூகத்தில் அனைவரும் சமம். அனைவரையும் சாதி, மதம் , இனம் , பாலினம் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்தப்படவேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் எழுதியுள்ளோம். பள்ளி புத்தகங்களிலும் பாலின பாகுபாடு காட்டாமல் பழக வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்கள். ஆனால் பாடம் எடுக்கும் ஆசிரியர்களையே பால் பாகுபாடு வைத்து தான் அழைக்கிறோம்.
ஆண்கள் என்றால் சார்/ ஆசிரியர் என்பது. அதே பெண்கள் என்றால் மேடம் / ஆசிரியை என்று அழைப்பது. அதை மாற்றி எந்த பாலின ஆசிரியராக இருந்தாலும் டீச்சர் / ஆசிரியர் என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தற்போது கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஒலசேரியில் உள்ள பள்ளியில் , மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை இனிமேல் 'சார்' அல்லது 'மேடம்' என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதன்படி, டிசம்பர் 1, 2021 முதல் ஆசிரியர்களை வெறும் 'டீச்சர்' என்று அழைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த முன்னெடுப்பை உதாரணமாக வைத்து தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பாலின-நடுநிலை பெயர்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்குமாறு பொதுக் கல்வி இயக்குநரிடம் ஆணையக் குழு கேட்டுக் கொண்டது. இது வரவேற்கத்தக்க மாற்றம் என்று பலர் கருதுகின்றனர்.
இது குறித்து கல்வியாளர் பிரிஜித் பிகே கூறுகையில், “பாலின-நடுநிலை சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு ஒரு நேர்மறையான நடவடிக்கை. இப்போது நம் அன்றாட வழக்கத்தில் 'சார்' என்பது ஆண்பால் என்றும் 'டீச்சர்' என்பது பெண்பால் என்றும் பார்க்கப்படுகிறது. அதை மாற்றி அனைவரையும் டீச்சர் என்று அழைப்பது பாலின சமநிலையை உருவாகும் என்று நம்புகிறோம்" என்றார்.
கேரள குழந்தைகள் உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் ஜே சந்தியா, “இது பாலினக் கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்க நடவடிக்கை. 'நர்ஸ்' என்று கேட்டவுடன் ஒரு பெண்ணையும், 'பைலட்' என்று கேட்டால், அது ஆணாக இருப்பதையும் உடனடியாக நினைப்பதுதான் நமது தவறு. வேலைகளும் அனைவருக்குமானது. இந்த பாகுபாடு மனநிலை மாற வேண்டும், அந்த வழியில் இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது, "என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.