கொரோனா 2வது அலையின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிந்தவர்களின் சடலங்கள் கங்கை நதியில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு வீசப்பட்ட சடலங்களின் கணக்கு தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலையின்போது இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை எரியூட்டுவதற்காக மின்சார தகன மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டன. சில மயானங்களில் தகனம் செய்வதற்காக உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டன.
இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உடல்களை எரியூட்ட இடம் இல்லாமல் போனது. பலரது உடல்கள் மொத்தமாக எரியூட்டப்பட்டன. இதேபோல், கொரோனாவால் உயிரிழந்த பலரது உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டன. கங்கையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திருந்தன.
இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் எத்தனை பேரின் சடலங்கள் இவ்வாறு கங்கையில் வீசப்பட்டன என்பது குறித்த தகவலை அரசு தெரிவிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் பிஸ்வேஷ்வர் கொரோனாவால் பலியாகி கங்கை கரையில் புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்த தகவல் அரசிடம் இல்லை.
இதையும் படிங்க: ஓடுபாதையில் தரையிறங்கி சேதமான விமானம்: விமானிக்கு ₹ 85 கோடி அபராதம் விதித்த ம.பி அரசு..!!
கங்கை நதியில் உடல்கள் மிதந்தது குறித்தும், கங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடல்களை முறையாக கையாளுதல், நிர்வாகம் செய்தல் மற்றும் அப்புறப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (என்எம்சிஜி) அறிக்கை கேட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.