4 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்திற்கு இனி அரசு சலுகைகள் கிடையாது என மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரேன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒரு முக்கிய அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 4 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்திற்கு இனி அரசு சலுகைகள் எதுவும் கிடையாது. ஒரு தம்பதிக்கு இனி 4 குழந்தைகளுக்கு மேல் இருப்பது தெரியவந்தால், அவர்கள் அரசு திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என சட்டம் பிறப்பித்துள்ளது.
மாநிலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தவும், வெளிநபர்கள் ஊடுருவலை தவிர்க்கவே இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்கால சூழலை கருதி மாநில அரசு மக்கள்தொகை கமிஷன் அமைத்துள்ளது. இந்த கமிஷனின் ஆலோசனைப்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச படம் எடுத்து 18 எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் : ரூ.30 கோடிவரை மோசடி செய்த ஒடிசா அழகி கைது!
மணிப்பூர் மாநிலத்தில் 1971 முதல் 2001 காலகட்டத்தில் மக்கள்தொகை வளர்ச்சி 153.3 சதவீதமாக இருந்தது. அதேவேளை, இது 2001-2011 காலத்தில் 250 சதவீதம் வளர்ந்துள்ளது. அண்டை மாநிலத்தவர்கள் மற்றும் நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளதே இதற்கு காரணம் என மணிப்பூர் அரசு புகார் தெரிவித்துள்ளது. இதை கண்டறிந்து கடிவாளம் போடும் நோக்கிலும் இந்த சட்டம் இயற்றியுள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ ஜாய்கிசான் தெரிவித்துள்ளார். மணிப்பூரின் அண்டை மாநிலமான அசாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு அரசு வேலை இல்லை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Government, Manipur, Population