அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாட்னாவில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவ்கான் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
மாநிலத்தில் ஏழாவது முறையாகவும், தொடர்ச்சியாக 4-வது முறையாகவும் முதலமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார். மேலும், பாஜக-வைச் சேர்ந்த இரண்டு பேருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தர்கிஷோர் பிரசாத், ரேணுகா தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
கூட்டணிக் கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜித்தன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ்குமார் சுமன், விகாஷீல் இன்சான் கட்சியைச் சேர்ந்த முகேஷ் சாஹ்னி ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி புறக்கணித்தது.