ஹோம் /நியூஸ் /இந்தியா /

Union Budget 2019: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!

Union Budget 2019: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Union Budget 2019 | இடைக்கால பட்ஜெட்டில், ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல், கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று 2-வது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டுக்கு நேற்று இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அப்போது, நிர்மலா சீதாராமனுடன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் இருந்தனர்.

இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையையும், முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

இடைக்கால பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று பியூஷ் கோயல் அறிவித்தார். எனினும், வருமானவரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதலீடுகளின் கீழ், வரிச் சலுகை பெறுவதற்கான அளவு அதிகரிக்கப்படலாம்.

இதேபோல, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 20 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகள் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி 90,000 கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், வட்டி சலுகை, வரிவிகிதத்தை குறைப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறலாம்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக 87,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நாடு தழுவிய அளவில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நீர் சேமிப்புக்காக 10,000 கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே திட்டங்களுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், ரயில்வே துறையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், புதிய ரயில்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see... பட்ஜெட் 2019-ல் திருப்பூர் மக்களும், வணிகர்களும் எதிர்பார்ப்பது என்ன?

Published by:Vaijayanthi S
First published:

Tags: Budget 2019, Lok sabha, Minister Nirmala Seetharaman, Union Budget 2019