Home /News /national /

மக்களிடம் வரி எப்படி வசூலிக்க வேண்டும்? பட்ஜெட் உரையில் புறநானூறு பாடல் மூலம் விளக்கிய நிர்மலா சீதாராமன்

மக்களிடம் வரி எப்படி வசூலிக்க வேண்டும்? பட்ஜெட் உரையில் புறநானூறு பாடல் மூலம் விளக்கிய நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

அரசை நடத்த தேவையானதை மட்டுமே மக்களிடம் வசூலிக்கிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிசிராந்தையர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார்.

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, அரசின் அடுத்த 5 ஆண்டு திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றை அறிவித்தார். பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

    பட்ஜெட் உரையில் வரி அறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் முன்னர், சங்ககாலப் புலவர்களில் ஒருவரான பிசிராந்தையாரின் கூற்று ஒன்றை நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார். இந்த கூற்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

    ”காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
    மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
    நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
    வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
    அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
    கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
    மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
    பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
    யானை புக்க புலம் போல,
    தானும் உண்ணான், உலகமும் கெடுமே.” என்ற பாடலை நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்தார். பின்னர், இதற்கான விளக்கத்தையும் அவர் கூறினார்.

    ”ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து, அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாக்கும் நெல் அதிகமாக அழியும். இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும்.

    இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச்சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரொடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

    அரசை நடத்த தேவையானதை மட்டுமே மக்களிடம் வசூலிக்கிறோம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Budget 2019, Nirmala Sitharaman, Union Budget 2019

    அடுத்த செய்தி