புதுச்சேரியில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரியில் ஒரு நாள் பயணமாக வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன் ரிச்சர்ட் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் இத்தொகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.
அப்போது ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு பெண் தலையில் சூடி கொள்ள மல்லிகைப்பூ சரத்தை கொடுத்தார். இதனை மகிழ்வுடன் பெற்று கொண்டு அடுத்த வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்த பெண்ணுக்கு பூவை சூட்டிய மத்திய அமைச்சரை கூடியிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அவரை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் முழங்கப்பட்டது. இதற்கு ஏற்ப அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்-சிறுமியர் குத்தாட்டம் போட்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.