Home /News /national /

விலையை நீங்க உயர்த்திட்டு பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போடுறீங்க - நாடாளுமன்றத்தில் திமுக மீது கடுகடுத்த நிர்மலா சீதாராமன்

விலையை நீங்க உயர்த்திட்டு பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போடுறீங்க - நாடாளுமன்றத்தில் திமுக மீது கடுகடுத்த நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நீங்க விலையை உயர்த்திவிட்டு பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விற்கிறீங்க. ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது. உங்களுடைய அமைச்சரும்தான் அந்த கவுன்சில்ல இருந்தார். - நிர்மலா சீதாராமன்

  நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.பிக்கள் சஸ்பெண்ட், தர்ணா என இந்த மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பாக சென்று வருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்.பி கனிமொழி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  கனிமொழி பேசுகையில், ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மற்றொரு பக்கம் வருமானம் அதிகரிக்க வழியும் இல்லை. வேலையும் கிடைக்கவில்லை. அடிப்படை உணவு பொருள்களின் விலையையும் தினசரி ஏற்றிக்கொண்டே போகிறார்கள் அதனை குறைக்க வழிவகை செய்ய வாய்ப்பு இல்லை என்ற நிலை இருக்கும்போது இங்கு இருக்க கூடிய மக்கள் எப்படி வாழ்வது என்பதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.

  எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய அதாவது பாஜக ஆளாத மாநிலங்களில் இருப்பவர்களுக்கு கடன்கொடுக்க ஆர்பிஐ தயாராக இல்லை. உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் பதவியில் இல்லாத அரசாங்கங்களுக்கு நீங்கள் நிலுவையில் இருக்க கூடிய ஜிஎஸ்டி தொகையை கொடுத்தாலே போதும். நீங்கள் எங்களுக்கு வேற எந்தக்கடனும் தரவேண்டாம். அதை தந்தாலே நாங்களே வளமான மாநிலத்தை உருவாக்கி காட்ட முடியும். என்றார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

  கனிமொழி


  இதனையடுத்து தமிழில் பேசிய நிர்மலா சீதாராமன் , “2021நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ. 5, டீசல் மீதான வரி ரூ. 10 என்ற வகையில் மோடி குறைத்தார். அதேபோல, 2022, மே மாதம் மத்திய அரசு திரும்பவும் பெட்ரோல் மீதான வரியை ரூ. 9.50 காசுகளும் டீசல் மீது ரூ. 7 என்ற வகையிலும் விலை குறைக்கப்பட்டது. எல்பிஜி உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 மானியம் தருவதாக அறிவிக்கப்பட்டது.

  தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையில், நாங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தா பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைப்போம் அப்படின்னு சொன்னாங்க. டீசல் விலையிலும் 4 ரூபாய் குறைப்போம் அப்படின்னு சொன்னாங்க என்று கூறிய போது திமுக எம்.பிக்கள் இடைமறித்து பேசினர். என்னை பேசவே விடமாட்டேங்குறீங்க என நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார். மீண்டும் பேச தொடங்கியவர், அதைத் தவிர, மாநில அரசு எல்பிஜி மானியம் ரூ. 100 தருவோம்ன்னு சொன்னாங்க என்றார்.

  நிர்மலா சீதாராமன்


  அப்போது குறுக்கிட்ட திமுக எம்.பிக்கள், "கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டு வருவோம் என நீங்க கூட சொன்னீர்கள். அந்த கருப்புப்பணம் எங்கே?" என்று கேட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் நிதியமைச்சர் உரைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

  இதனால் ஆவேசமடைந்த நிதியமைச்சர், “அவங்க பேசுறது நான் கேட்கனும்..அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நான் கேட்கனும். நான் பதில் கொடுக்கும் போது தடுத்து நிறுத்துறது நல்ல அரசியல் இல்லை. நான் கொடுக்கிற பதிலை கேட்டுத்தான் ஆகனும். நீங்க சொன்னது எல்லாம் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்”. என்றார்.

  அவரை சமாதானம் செய்ய சபாநாயகர் முயன்றார். வேண்டுமென்றே என்னை இடையூறு செய்கிறார்கள். நான் உண்மையை பேசுகிறேன். அவர்களுக்கு எனது உரையில் மறுப்பு இருந்தால் நான் பேசிய பின்னர் பேசட்டும் என்றார். இதற்கிடையில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர் அவையில் இருந்து வெளியேறினார். அப்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன் என்னுடைய பேச்சை கேட்டுட்டு வெளிய போங்க என்றார்.  மீண்டும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் தனது உரையை தொடர்ந்தார். அப்போது பேசிய சபாநாயகர் திமுக எம்.பிக்களுக்கு பதில் சொல்றீங்கன்னா தமிழ்ல பேசுங்க என்று அனுமதி அளித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. மத்திய அரசு மீது இவ்வளவு கோபமாக ஜிஎஸ்டி போட்டீங்கன்னு சொல்ற திமுக. பிராண்டட் பொருள்கள் மீது தான் ஜிஎஸ்டி போட்டிருக்கோம். அது மத்திய அரசு போடல, மோடியும் உயர்த்தவில்லை. உங்க மந்திரியும் உட்காந்து இருக்குற ஜிஎஸ்டி கவுன்சில்ல தான் நிர்ணயம் ஆச்சு. 5 சதவீதம் தான் பிராண்ட் பொருள்கள் மீது வரிப்போட வேண்டும்.

  Also Read: Rashtrapatni: குடியரசுத் தலைவர் குறித்து அவதூறு.. சோனியா- ஸ்மிருதி இரானி இடையே காரசார பேச்சு

  ஒரு கிலோ தயிர் வாங்கினால் அதற்கு முன்பிருந்த பழைய விலை ரூ. 100. அதற்கு மேல் வரி போட்டா அது ரூ.105 ஆகும். ஆனால், நீங்க என்ன விலைக்கு விற்கிறீங்க? ரூ. 120க்கு. ஜிஎஸ்டி கவுன்சில் ஐந்து சதவீதம்தான் வரி போடச் சென்னது. ஆனால், நீங்க என்ன விலை போடுறீங்க.

  லஸ்ஸி அதாவது இனிப்பாக இருக்கக் கூடிய மோர் 27 ரூபாய்க்கு விற்கனும் பழைய ரேட்டு. அதன் மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி போட்ட பிறகு அது ரூ. 28.35 காசுகளாக இருக்கனும். ஆனா, நீங்க ரூ. 30க்கு விற்கிறீங்க. ஜிஎஸ்டி மீது பழி போட்டுவிட்டு நீங்க மக்களுக்கு அதிக விலைக்கு விற்கிறீர்கள், பாரத்தை சுமத்துகிறீர்கள். ரூ.10க்கு விற்க வேண்டிய மோர் மீது ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டால் அது ரூ. 10.50 காசுகளாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ. 12க்கு விற்கிறீர்கள். அது எப்படி நியாயமாகும்.

  நீங்க விலையை உயர்த்திவிட்டு பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விற்கிறீங்க. ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது. உங்களுடைய அமைச்சரும்தான் அந்த கவுன்சில்ல இருந்தார். அவரும்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கிட்டார். ஏகமனதாக எல்லோரும் ஒருமித்த அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான். அதில் ஏழைகளை பாதிக்கக் கூடிய வகையில் எதுவும் செய்யவில்லை” என்றார்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: BJP, DMK, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Kanimozhi, Nirmala Sitharaman

  அடுத்த செய்தி