நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளுள் 6 பேரில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ராகுல் காந்தி எங்களுக்கு ஆண் தேவதை என நிர்பயாவின் தந்தை சொன்னதை நாடே பாராட்டுவதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தீர்ப்பை வரவேற்று கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:-
”தன் மகள் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட பின் நடைபிணமாக இருந்த தங்களுக்கு, உணர்வுப்பூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்தவர் ராகுல் காந்தி என நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் மெய்சிலிர்க்க தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அதேசமயம், இந்த உதவியை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல்காந்தி கண்டிப்பாக கூறியதையும் பத்ரிநாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை தள்ளிப்போகும்போதெல்லாம் துவண்டுபோன நிர்பயாவின் பெற்றோரும், தங்கள் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஒரு செய்தி நிறுவனத்துக்கு நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் அளித்துள்ள பேட்டியில், கடந்த 2012ஆம் ஆண்டு தங்கள் மகள் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டது முதல், அப்போது காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல் காந்தி பேருதவி செய்ததை முதன்முறையாக நினைவுகூர்ந்துள்ளார்.
நிர்பாயாவுக்கு கொடுமை நிகழ்ந்தபோது, பலர் தங்களுக்கு உதவ முன் வந்ததாக தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தியின் உதவியை மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான ரீதியில் ராகுல் காந்தி உதவியதோடு, வழக்கு முடியும் வரை பொருளாதார உதவி செய்ததாகவும் பத்ரிநாத் சிங் கூறியுள்ளார்.
நிர்பயாவின் இழப்பால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்ததோடு, அவரை பைலட் ஆக்கியதும் ராகுல்காந்தி தான் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் எவ்வாறாக இருந்தாலும், ராகுல் காந்தி எங்களுக்கு ஆண் தேவதை என வர்ணித்துள்ள பத்ரிநாத் சிங், இவ்வளவு உதவிகளையும் செய்துவிட்டு, அதனை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்ட தகவலை, தமது பேட்டியின்போது முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக அரசியல்வாதிகள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் பலமடங்கு கூடுதலான விளம்பரத்தை தேடி ஆதாயம் தேடுவது இயல்பு. ஆனால், ராகுல்காந்தி அவர்கள் எவ்வித விளம்பரமும் இன்றி, பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினருக்கு செய்த உதவியை இன்றைக்கு நாடே போற்றுகிறது, பாராட்டுகிறது.”
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.