குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான சான்றுகளை அளித்து அதன் மூலம் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இவர் மீது தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்தன. நீரவ் மோடியின் வைர நகைக் கடைகள், இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் உட்பட உலகின் பல நாடுகளில் உள்ளன.
இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அறிந்த நீரவ் மோடி கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றார். மேற்கிந்திய தீவு நாடொன்றில் அவர் தஞ்சமடைந்தார். அங்கு அவருக்கு இருந்த அழுத்தம் காரணமாக பிரிட்டனில் வந்து தலைமறைவானார். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்து அரசு அவரை 2019 மார்ச் மாதம் லண்டன் மெட்ரோ ஸ்டேஷனில் வைத்து கைது செய்தது. லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காக சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. தொடர்ந்து மருத்துவக் காரணங்களை காட்டி மேல்முறையீடு செய்துவந்தார் நீரவ் மோடி. பிப்ரவரி மாதம் நீரவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் நீதிபதி சாமுவேஸ் கூஸ் அளித்த தீர்ப்பில், "நீரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீரவ் மோடியை இந்தியாவுக்கு ஒப்படைப்பதில் மனித உரிமைகளுக்கு இணங்குவதில் திருப்தி அடைகிறேன். நீரவ் மோடி முறையான வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை நான் ஏற்கவில்லை. நான் உண்மையான பரிவர்த்தனைகளைக் காணவில்லை. நேர்மையற்ற ஒரு செயல்முறை இருப்பதாக நம்புகிறேன்.
மும்பை ஆர்தர் சாலை சிறையில் நீரவ் மோடிக்கு போதுமான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல பராமரிப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார். நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பினால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அதே போல சாட்சியங்களை அழிக்கவும், சாட்சிகளை அச்சுறுத்தவும் நீரவ் மோடி சதி செய்ததாக இங்கிலாந்து நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்தியாவில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளிக்க வேணும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டனின் நாடு கடத்தல் விதிகளின் படி தனது உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிபதி அனுப்பினார். இரண்டு மாதத்திற்குள் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடந்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, India, Nirav modi, Nirav modi issue, Nirav modi properties, Prison