கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெங்களூரு பூனே தேசிய நெடுஞ்சாலையில் தானே புரம் என்ற பகுதியில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாபூர் என்ற பகுதியில் இருந்து தனியார் சொகுசு பஸ் பயணிகளுடன் பெங்களூரு நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து ஹுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெங்களூரு பூனே தேசிய நெடுஞ்சாலையில் தானே புரம் என்ற பகுதியை நள்ளிரவு 12 மணி அளவில் கடந்தபோது, லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பஸ் ஓட்டுநர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் என 6 பேர் உயிரிழந்தனர். சொகுசு பஸ்சில் இருந்த இருபத்தி ஆறு பேர் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்காக ஹுப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான லாரி-பேருந்து
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்று விபத்து நடந்த அதே இடத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சொகுசு பஸ் ஒன்று விபத்தை சந்தித்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Must Read : 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்
குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பேருந்து விபத்துக்கள் பதிவாகி வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - ஆ.குமரேசன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.