Home /News /national /

கட்டாய மதமாற்றம் என்பதற்கு ஆதாரம் இல்லை - ஹாதியா வழக்கை மூட என்.ஐ.ஏ முடிவு

கட்டாய மதமாற்றம் என்பதற்கு ஆதாரம் இல்லை - ஹாதியா வழக்கை மூட என்.ஐ.ஏ முடிவு

ஹாதியா

ஹாதியா

நாட்டை பரபரப்புக்கு உள்ளாக்கிய கேரளப்பெண் ஹாதியா வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்காததால் வழக்கை முடிக்க தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) முடிவு செய்துள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்ட கேரளப்பெண் ஹாதியாவை, தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது என்ற புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியாததால் வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளது.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை அடுத்த வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகள் அகிலா (வயது 24). தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த அகிலா கடந்த 2016-ம் ஆண்டு திடீரென மாயமானார். போலீசில் புகார் செய்தும் அகிலாவை கண்டுபிடிக்க முடியாததால், அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    அதில் சேலத்தில் படித்து வந்த தன் மகளை அவருடன் படித்த சிலர் கடத்தி சென்று வேறு மதத்திற்கு மாற்றிவிட்டனர். அவர்களுடன் என் மகள் தங்கியுள்ளார். அவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அகிலாவை கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. போலீசார் அகிலாவை தேடிவந்த நிலையில் அகிலா, கோர்ட்டில் ஆஜரானார்.

    ஹாதியா மற்றும் அவரது தந்தை அசோகன்


    அப்போது நீதிபதி முன்பு, தான் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாகவும், தற்போது அறக்கட்டளை ஒன்றில் தங்கியிருப்பதாகவும் கூறினார். அவரது கருத்தை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதோடு அகிலாவை அவர் விருப்பப்படி செல்ல அனுமதித்தது.

    இதையடுத்து, அகிலாவின் தந்தை அசோகன் மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் அவரை சிரியாவுக்கு கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அகிலா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் ஷபின் ஜஹான் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறினார். திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் சமர்ப்பித்தார்.

    ஆனால், இந்தத் திருமணத்தை ஏற்க கோர்ட்டு மறுத்தது. காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி திருமணம் செய்யலாம்? என்று அகிலாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    மேலும், இத்திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்றும் திருமணத்தை ரத்து செய்தும் பஞ்சாயத்து அலுவலக செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அகிலாவை எர்ணாகுளம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து, டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே, இந்தத் திருமணத்தில் தீவிரவாத இயக்கங்கள் பின்னணி இருப்பதாகவும், ஷபின் ஜகானுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியது.

    உச்சநீதிமன்றம்


    ஷபின் ஜகானின் மனு மீதான விசாரணை பல கட்டங்களாக நடந்த நிலையில், ஹாதியாவின் திருமணம் செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    மேலும், ஹாதியா தனது படிப்பை தொடரலாம் சேலத்தில் ஹாதியா படித்து வரும் கல்லூரி முதல்வர் அவருக்கு காப்பாளராக இருப்பார். தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணையை தொடரலாம் அதற்கு தடை எதுவும் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    ஹாதியா வழக்கு மட்டுமல்லாமல் கேரளாவில் காதல் மூலம் மதம் மாற்றுவதாக எழுந்த புகாரில் 11 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்தது. இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் காதல் மூலம் மதமாற்றம் என்பதற்காக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

    காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களின் விருப்பப்படியே மதமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட வழக்குகளை முடிக்க முடிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யலாம் என தகவல்கள் கூறுகின்றன.
    Published by:Sankar
    First published:

    Tags: Hadiya, Kerala, NIA

    அடுத்த செய்தி