இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது. மேலும் அதில் ஆக்ஸிஜன் , வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்ட முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மரணிப்போர் அதிகம் என்பது தான் துயரம். அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனையடுத்து பல்வேறு நட்பு நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு இந்த உதவிகள் பேருதவிகரமானதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்ஸ் மற்றும் பிற மருத்து உபகரணங்களை வழங்க முடிவு செய்திருக்கிறது. இதனை நியூயார்க் மாகாண மேயர் பில் டி பலசியோ (Bill De Blasio) அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ஒரு வருடத்துக்கு முன்பு வரை நியூயார்க் உலக அளவில் ஏற்பட்ட பாதிப்பில் முக்கிய இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அதில் இருந்து வெளியேறியுள்ளது. தற்போது இந்தியாவிற்கு அதன் கடின காலத்தை கடக்க உதவ முன்வந்திருக்கிறது. நாங்கள் இந்தியாவுக்கு முக்கிய மருத்துவ உபகரணங்களை வழங்கவிருக்கிறோம். கொரோனாவிற்கு எதிராக யாராலும் தனித்து போரிட முடியாது. ஒன்றிணைந்து மனித உயிர்களை காத்து, இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இருந்து மீள்வோம் என்று தெரிவித்தார்.
இதற்கு இந்திய தூதரகம் சார்பாக ரந்திர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசுக்கு நியூயார்க் நகரம் வழங்கியுள்ள விலைமதிப்பு மிக்க பரிசுக்கு நன்றி. நியூயார்க் வழங்கியுள்ள வெண்டிலேட்டர், பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவை இந்தியாவில் இந்த இக்கட்டான காலத்தை கடப்பதற்கு உதவும், என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த வருடம் அமெரிக்க மருத்துவமனைகள் தவித்து வந்தபோது இந்தியா உதவியது. தற்போது கடினமான இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியிருந்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கொரோனாவின் அபாயகரமான காலகட்டத்தில் இந்தியாவுக்கு கூடுதல் உதவிகள் வழங்க இந்திய அரசுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். என்று குறிப்பிட்டார்.
மேலும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ரூ. 135 கோடி நிதியுதவி வழங்க முன் வந்துள்ளார். மேலும் மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி நாதெல்லா இந்தியாவுக்கு தங்கள் தொழில்நுட்பங்களை மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், ஆக்சிஜன் உள்ளிட்ட சிகிச்சை சாதனங்கள் வாங்குவதற்கு இந்தியாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, NewYork