முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய வரைபடத்தில் புதிய மாற்றம்...! உருவானது ஜம்மு & காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள்

இந்திய வரைபடத்தில் புதிய மாற்றம்...! உருவானது ஜம்மு & காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் சட்டம்-ஒழுங்கு விவகாரமும், லடாக் பகுதியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் மத்திய அரசின் கீழ் வந்துள்ளன.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த 560 மாகாணங்கள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டன. அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் சொத்துக்களை வேறு மாநிலத்தவர் வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதேபோல, ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு வழிவகை செய்யும் 370-வது சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்த சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்தது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு யூனியன் பிரதேசங்கள் நேற்றிரவு செயல்பாட்டுக்கு வந்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

ஜம்மு-காஷ்மீர் பகுதி, புதுச்சேரியைப் போன்று சட்டப்பேரவையை கொண்டதாக இருக்கும். ஆனால், லடாக் பகுதி, சட்டப்பேரவை இல்லாத சண்டிகரைப் போன்று இருக்கும். ஜம்மு-காஷ்மீரின் காவல், சட்டம், ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நில அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆனால், லடாக் பகுதி முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். துணைநிலை ஆளுநர் மூலமாக இதன் நிர்வாகத்தை மத்திய அரசு மேற்கொள்ளும்.

இதற்காக ஜம்மு-காஷ்மீர் பகுதியின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திராவும், லடாக் பகுதியின் துணைநிலை ஆளுநராக ஆர்.கே.மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இன்று தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கோவா-வுக்கு மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மாநிலத்தைப் பிரித்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலைமை சீரானதும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இன்று முதல் இந்தியாவில் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29-ல் இருந்து 28 ஆக குறைந்துள்ளது. அதேபோல, யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 9 ஆக அதிகரித்துள்ளது.

First published:

Tags: Article 370, Jammu and Kashmir