விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம்... எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடிவேண்டுகோள்

விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம்... எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடிவேண்டுகோள்

பிரதமர் மோடி

விவசாயிகளை தவறாக வழிநடத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கைகூப்பி கேட்டுக் கொண்டார்.

  • Share this:
வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி கைகூப்பி கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நலநிதி வழங்கும் நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு வேளாண் சட்டங்களை ஒரே இரவில் கொண்டுவரவில்லை என்றும்  22 ஆண்டுகளாக ஒவ்வொரு அரசும், மாநிலங்களும் விரிவாக விவாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கட்சிகள், இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக தங்களது தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்ததாக பிரதமர் தெரிவித்தார்.

சட்டங்கள் கொண்டுவரப்பட்டு 6 முதல் 7 மாதங்கள் ஆன நிலையில், திடீரென தங்களது சொந்த அரசியல் ஆதாயத்துக்காக பொய்களை கட்டவிழ்த்து விடுவதாக அவர் குற்றம்சாட்டினார். எனவே, விவசாயிகளை தவறாக வழிநடத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கைகூப்பி கேட்டுக் கொண்டார்.

குறைந்தபட்ச ஆதார விலை முறை முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் பிரதமர் கூறினார். விளைபொருட்களை சந்தையில் விற்பதா அல்லது வெளியில் விற்பதா என்பதை விவசாயிகளே முடிவுசெய்யலாம் என்று மட்டுமே புதிய சட்டங்களில் மத்திய அரசு கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மண்டி முறைகள் குறித்து மற்றொரு பொய்யுரைக்கப்படுவதாகவும், புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தபிறகு ஒரு சந்தை கூட முடப்படவில்லை என்றும் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். பண்ணை ஒப்பந்த முறை குறித்தும் தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், பண்ணை ஒப்பந்தம் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

விவசாயிகளின் ஒவ்வொரு சந்தேகத்தையும், கவலைகளையும் தீர்த்து வைக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: