புதுவை மாநில முன்னாள் அமைச்சர் பி.கண்ணன் அவரது மகனுடன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா உறுப்பினருமான பி.கண்ணன் டெல்லியில் பாஜக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் அவருடைய மகனும் பாஜகவில் இணைந்துள்ளார்.
பி.கண்ணன் அவரின் அரசியல் பாதையில் பல கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன், 3 முறை புதிதாக கட்சியும் தொடங்கியவர்.
காங்கிரஸ் கட்சியையும், என்.ஆர்,காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் என்.ரங்கசாமியையும் முன்னர் விமர்சித்து பேசியிருக்கும் பி.கண்ணன், முதலில் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கினார். பின்னர் 1996ம் ஆண்டு ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்த போது அதில் இணைந்தார். அப்போது த.மா.கா-வை முன்னின்று வழிநடத்தி 6 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் திமுக கூட்டணி அரசில் இணைந்து மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் த.மா.கா காங்கிரஸுடன் இணைந்தது.
2001 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2002ம் ஆண்டில் சோனியா காந்தி முன்னிலையில் தன்னுடைய கட்சியை காங்கிரசில் இணைத்தார்.
இதன் பின்னர் 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மீண்டும் 2005ம் ஆண்டு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதனையடுத்து 2009-ல் மீண்டும் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டார். அப்போது அவர் மாநிலங்களவை எம்.பி ஆக்கப்பட்டார். 2016ல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட சீட் பெற்றார். இருப்பினும் அப்போது தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.