பிரிட்டனில் கொரோனா வைரஸின் மாற்றமடைந்த புதிய வகைமாதிரி ஒன்று பரவி வருவதையடுத்து இந்தியா உட்பட 40 நாடுகள் பிரிட்டன் விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் வகை பரவியதற்கான தடயங்கள் இல்லை என்றும், பிரிட்டன் விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கு முன்னெச்சரிக்கையே காரணம் என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மாதிரி 70% அதிகமாகப் பரவக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், “இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. இந்தியாவில் இந்த புதுவகை கொரோனா வைரஸ் இருப்பதற்கான தடயங்கள் இல்லை” என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் சமிரான் பாண்டா, “இதுவரை ஆய்வு செய்த மாதிரிகளில் பிரிட்டனில் பரவி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் வகை இருப்பதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஜெனோம் தொடர்வரிசை சோதனை மேற்கொள்ளும் இந்திய சோதனைச் சாலைகளில் உள்ள மாதிரிகளில் எதிலும் நாடு முழுதும் புதுவகை கொரோனாவுக்கான தடயங்கள் இல்லை. ” என்றார்.
ஜெனோம் சீக்வன்சிங் என்று அழைக்கப்படும் மரபணு தொடர்வரிசைப்படுத்துதல் எதற்காகவெனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுப்பிடிக்கவே.
வைரஸில் புதிதாக மரபியல் மாற்றங்கள் தோன்றினால் முந்தைய மாற்றங்களுடன் இந்த மாற்றம் ஒப்புநோக்கப்பட்டு இந்த புதிய மாற்றத்தின் தன்மை அறுதியிடப்படும் என்கிறார் டாக்டர் பாண்டா. இதுவரை சிறிய அளவில் மாற்றமடைந்துள்ளதே தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்கிறார் அவர். பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாற்றமடைந்த வைரஸின் தன்மை இங்கு கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும் இந்த புதுவகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்பதனாலேயே அதிக ஆபத்தானது என்று கருதவேண்டிய அவசியமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona spread, CoronaVirus, New strain