நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்ததை அடுத்து 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சரவை தொடர்பாக மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
புதிய அமைச்சர்கள் பட்டியலை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று சந்தித்துப் பேசினார். 5 மணிநேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது, ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்களில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பாஜகவில் ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், அமைச்சரவையில் அமித் ஷாவை இம்முறை இடம்பெறச் செய்ததால் பாஜகவுக்கு புதிய தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே சமயம், ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு வியூகம் வகுத்து தரும் அமித் ஷாவை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கூடாது என பாஜகவில் இருந்து வரும் குரல்கள் பற்றியும் மோடி ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நாளை இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மோடியை தொடர்ந்து அமைச்சர்களாக பதவியேற்கும் அவரது சகாக்களுக்கும் ராம்நாத் கோவிந்த் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.
மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவியை வகிக்கும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதே போல் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக ஆளும் முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
Also see... பாஜக வெற்றிக் கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi Cabinet, PM Modi