நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றம் செல்ல யோசனை - ஏழு மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றம் செல்ல யோசனை - ஏழு மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை

மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியாகாந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

 • Share this:
  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் 7 மாநில முதலமைச்சர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். அதில் நீட்/ஜே.இ.இ தேர்வுகள், கொரோனா பிரச்னை மற்றும் ஜி.எஸ்.டி விவகாரம் போன்றவை குறித்து உரையாடப்பட்டன.

  மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர்களான அமரீந்தர் சிங், நாராயணசாமி உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் மத்திய அரசை எதிர்த்து போராடுவது ஆகியவற்றுக்கான தேவை இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, கூட்டாட்சியின் பெயரால் மாநில அரசுகள் மத்திய அரசால் ”தகர்க்கப்படுகின்றன” என்றார். மேலும், அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறிய அவர், ”இது மாணவர்கள் மீதான ஓர் உளவியல் ரீதியிலான சித்திரவதை. ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வளவு அட்டூழியங்களை நான் பார்த்தே இல்லை. நிலைமை படுமோசமாக உள்ளது. நம் குழந்தைகளுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.  மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ”நாம் இந்த அரசுக்கு அஞ்சப் போகிறோமா அல்லது அதற்கெதிராகப் போராடப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். மத்தியில் பாஜகவை தேர்ந்தெடுத்த அதே மக்கள்தான் நம் எல்லோரையும் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் நாம் ஏதாவது செய்தால் அது பாவம், அதையே அவர்கள் செய்தால் புண்ணியமா?” என்று கேள்வி எழுப்பினார்.

  ராஜஸ்தான், புதுச்சேரி, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் காணொளியில் தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட அறிவிப்புகள் கவலை அளிப்பதாகவும், தேர்வுகள் அலட்சியமாகக் கையாளப்படுவதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
  Published by:Rizwan
  First published: