பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவை கொடுமான நபர் என அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் சித்து குறித்து அவரின் மூத்த சகோதரி இவ்வாறு தெரிவித்திருப்பது சித்துவுக்கு பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.
கிரிக்கெட்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சிங் சித்து. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகியிருக்கும் சித்துவுக்கு சகோதரி வடிவில் பிரச்னை எழுந்துள்ளது. சித்துவின் மூத்த சகோதரியான சுமன் தூர், சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த போது சித்து மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.
சுமன் தூர் கூறியதாவது, “கடந்த 1986ம் ஆண்டு தந்தை மரணத்துக்கு பின்னர் சொத்துக்களை கைப்பற்றும் எண்ணத்தில் தாயையும், சகோதரியான தன்னையும் சித்து.விரட்டிவிட்டார். என் தந்தை இறந்த போது அவரின் பென்ஷன் பணம், வீடு, நிலம் அனைத்தையும் சித்து அபகரித்துக் கொண்டார். பணத்துக்காக என் தாயை கைவிட்டார். இந்த நிலையில் எனது தாயார் 1989ம் ஆண்டு கைவிடப்பட்ட நிலையில் ரயில்வே நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நான் மிகவும் கடினமான தருணங்களை அனுபவித்திருக்கிறேன். என்னுடைய தாயார் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Also read: Wine என்பது மது கிடையாது - சூப்பர் மார்க்கெட்டில் வைன் விற்பனை நடவடிக்கையை நியாயப்படுத்தும் சஞ்சய் ராவத்!!
நான் கூறும் அனைத்துக்கும் என்னிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. நவ்ஜோத் சிங் சித்து ஒரு கொடூரமான மனிதர். தான் 2 வயதாக இருக்கும் போதே தனது பெற்றோர்கள் பிரிந்துவிட்டதாக 1987ம் ஆண்டு ஊடகங்களுக்கு பொய்யான தகவலை சித்து அளித்தார். எங்களின் பெற்றோர் குறித்து சித்து கூறியவை அனைத்தும் முற்றிலும் பொய்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் சித்துவுடன் கூடிய அவருடைய குடும்ப படத்தை காட்டி, இதில் இருக்கும் சித்துவுக்கு 2 வயது தானா ஆகும் என பார்த்து சொல்லுங்கள் என அவர் ஊடகங்களிடம் கூறினார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சுமர் தூர், தான் சித்துவை நேரில் சந்திக்க வருவதாக கூறிவிட்டு கிளம்பி வந்ததாகவும், கடந்த ஜனவரி 20ம் தேதி சித்து வீட்டுக்கு சென்றபோது அவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வீட்டு கதவை கூட திறக்காமல் அவருடைய வீட்டு வேலைக்காரர்கள் தன்னை அனுப்பியதாகவும், பின்னர் போனையும் பிளாக் செய்துவிட்டதாகவும் அவரின் சகோதரி தெரிவித்தார்.
Also read: பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் - TRAI அதிரடி உத்தரவு!!
எனக்கு 70 வயது ஆகிறது, என் குடும்பத்தாரை பற்றிய விஷயங்களை வெளியிடுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இருப்பினும் என் தாயாருக்கு நீதி வேண்டும். எனக்கு சித்துவிடம் இருந்து பணமோ, வேறு எதுவுமே தேவையில்லை என சுமர் தூர் தெரிவித்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக சித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், அவர் மீதான அவரின் சகோதரியின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.