நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரண்டாவது முறையாக ஆஜராகியுள்ளார். இதை கண்டித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ள, யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் வியாழக்கிழமை மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இன்று ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டது.
அதன்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தியுடன், அவரது பிள்ளைகளான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடனிருந்தனர். இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அமலாக்கத்துறைக்கு எதிராக பேனர் பதாகைகளை ஏந்தி சென்ற அவர்களை, போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தனர். இதையடுத்து, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்களை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன்பாக சோனியா காந்தி 2வது நாளாக ஆஜர்.. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் தொற்றி கொண்டதால், ஏராளமான போலீசார் குவிந்தனர். ஆனால், ராகுல் காந்தி போராட்டத்தை கைவிட மறுத்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து. அவர் போராட்டத்தை கைவிட்டார். பின்பு ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸார் வாகனத்தில் ஏற்றியபோது, ‘இந்தியா ஒரு போலிஸ் நாடு என்றும், மோடி அதன் ராஜா என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதனிடையே, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி வளாகத்தில் திரண்ட தொண்டர்கள், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஒத்துழைக்காத நபர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, போலீஸ் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.