நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் ஜூன் 5ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு நேரில் ஆஜராக ராகுல் காந்தி அவகாசம் கோரியுள்ளார்.
கடந்த 1938ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம்". சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசின் குரலாக ஒலித்து வந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் அந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட "யங் இந்தியா லிமிடெட்" என்ற நிறுவனம் 2010-ம் ஆண்டில் கையக்கப்படுத்தியது. இதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் எவ்வித ஆலோசனை செய்யாமல் 50 லட்சம் ரூபாய்க்கு தொடங்கப்பட்ட 'யங் இந்தியா' நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் 2,000 கோடி ரூபாய் வரை ஆதாயம் அடைந்துள்ளதாக கூறி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, அதிகளவு பணம் மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை கீழ் 2014ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் இவ்வழக்கில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி இருவருக்கும் உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. மேலும், இதே வழக்கில் 2016ம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, சுமந்த் துபே, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து இருந்தது. இவ்வழக்கில் இறுதியாக அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தியது. இந்நிலையில் மேற்கொண்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் அமலாக்கthதுறை நேரில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பியது.
அதில், ராகுல் காந்தி ஜூன் 2ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும், சோனியா வரும் ஜூன் 8ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ளதால், இன்று நேரில் ஆஜராக முடியாது எனவும், வரும் ஜூன் 5 ஆம் தேதிக்கு பிறகு ஏதேனும் ஒரு தேதி தரும்படி அவருடைய வழக்கறிஞர்கள் குழு பதில் வழங்கியுள்ளது.
இதனால் இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜராக மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கோவிட் உறுதியாகியுள்ளதால் வரும் 8ஆம் தேதி அவர் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விதவிதமான பாரம்பரிய உடைகளில் பிரதமர் நரேந்திர மோடி
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய விதமாக மத்திய புலனாய்வு அமைப்புகள் பழைய வழக்குகளின் விசாரணைகளை மீண்டும் விசாரிக்க தொடங்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Enforcement Directorate, National herald, Rahul gandhi, Sonia Gandhi