Home /News /national /

நதிகளை தூய்மைப்படுத்த காலக்கெடு; உள்ளாட்சிகளுக்கு அபராதம்! சாட்டையெடுக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

நதிகளை தூய்மைப்படுத்த காலக்கெடு; உள்ளாட்சிகளுக்கு அபராதம்! சாட்டையெடுக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

  • News18
  • Last Updated :
    இந்தியா முழுவதும் அதிகம் மாசடைந்த நதிகளை தூய்மைப்படுத்துவதற்கான காலக்கெடுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள 351 நதிகளிலும் 100% கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கான செயல்திட்டங்களை 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடித்திருக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் 2018-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் 351 நதிகள் மோசமாக மாசடைந்துள்ளதாக தெரியவந்தது.

    அதில் தமிழகத்தில் காவேரி, திருமணிமுத்தாறு, தாமிரபரணி, சிறுமுகை வசிஷ்டா, சரபங்கா ஆகிய நதிகளின் 380 கிலோமீட்டர் தூரம் மாசடைந்துள்ளது.

    காவேரி ஆறு மேட்டூர் முதல் மயிலாடுதுறை வரையிலான 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாசடைந்திருப்பதாகவும், தாமிரபரணி ஆறு பாப்பான்குளம் முதல் ஆறுமுகநேரி வரையிலான 80 கிலோமீட்டர் தூரம் மாசடைந்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

    மேலும், பவானி ஆறு சிறுவாணி முதல் காளிங்கராயன் வரையிலான 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மாசடைந்துள்ளதாகவும், சரபங்கா ஆறு சேலம் மாவட்டம் தாத்தியம்பட்டி முதல் கோனபாடி வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்திற்கும், திருமணிமுத்தாறு சேலம் முதல் பாப்பாரப்பட்டி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வசிஷ்டா ஆறு சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் முதல் தியாகனூர் வரையிலான 10 தூரத்திற்கு மாசடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது. இந்தியாவின் நகர்ப்புறங்களில் உற்பத்தியாகும் கழிவுநீரில் 62 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மலேரியா மற்றும் டயரியாவால் 2017-ம் ஆண்டில் மட்டும் 10,738 பேர் இறந்துள்ளனர் போன்ற விபரங்கள் இந்த வழக்கு விசாரணையின்போது தெரியவந்தது.

    இதனைக் கருத்தில் கொண்டு 351 ஆறுகளிலும் கழிவு நீர் கலக்காமல் இருக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கான செயல்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து நதிகளையும் மறுசீரமைப்பதற்கான செயல்திட்டங்கள் தயாராகின.  தற்போது இந்த செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ளது.

    இது தொடர்பாக உத்தரவிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து மாசடைந்த நதிகளிலும் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்காக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். தவறும் உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கால தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 5லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

    2021-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து நதிகளையும் மறுசீரமைப்பதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தவறும் உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கால தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

    இந்த பணிகளை மாநில அளவில் தலைமைச் செயலாளரும் தேசிய அளவில் ஜல்சக்தி துறைச் செயலாளரும் கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை மத்திய அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும். மறுசீரமைப்பு செயல்முறைகள் குறித்த மாதாந்திர அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Polluted river

    அடுத்த செய்தி