லிஃப்ட் விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ம.பி முன்னாள் முதல்வர் கமல் நாத்!

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்

லிஃப்ட் அதிக பாரம் காரணமாக 10 அடிக்கு கீழ் இருந்த பேஸ்மெண்ட்டில் சென்று மோதியது. அதே நேரத்தில் மோதிய வேகத்தில் லிஃப்டின் கதவு ஜாம் ஆகியது.

  • Share this:
லிஃப்ட் விழுந்து விபத்துக்குள்ளானதில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராகவும் விளங்குபவர் கமல் நாத். அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சி பிரமுகர்களை நேரில் சென்று கமல் நாத் சந்தித்து வருகிறார். இந்தூரில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் ஒரு அங்கமாக DNS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் ரமேஷ்வர் பட்டேலை சந்திப்பதற்காக நேற்று மாலை 6.15 மணி அளவில் மருத்துவமனைக்கு கமல் நாத் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜீது பட்வாரி, சஜ்ஜன் சிங் வெர்மா, விஷால் பட்டேல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் உடன் சென்றனர்.

மருத்துவமனையின் 3வது தளத்தில் உள்ள ரமேஷ்வர் பட்டேலை சந்திப்பதற்காக தரை தளத்தில் இருந்த லிஃப்டில் கமல் நாத் மற்றும் அவருடன் வந்த காங்கிரஸ் பிரமுகர்கள் லிஃப்டிற்குள் சென்றனர். 3வது தளத்துக்கு செல்வதற்காக பட்டனை அழுத்திய போது லிஃப்ட் அதிக பாரம் காரணமாக 10 அடிக்கு கீழ் இருந்த பேஸ்மெண்ட்டில் சென்று மோதியது. அதே நேரத்தில் மோதிய வேகத்தில் லிஃப்டின் கதவு ஜாம் ஆகியது.

பின்னர் சர்வீஸ் டெக்னீசியனை வரவழைத்து கதவை திறக்கச் செய்து கமல் நாத் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். மருத்துவமனை வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாக அதிகாரி மனிஷ் சங்வி கூறுகையில் லிஃப்ட் அறுந்துவிட வில்லை, பாரம் அதிகம் தாங்க முடியாததால் அது கீழ் நோக்கி சென்றது, பின்னர் அதனை கீழ் தளத்திற்கு செல்ல வைத்து அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றார்.

இதனிடையே விபத்து குறித்து அறிந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி கமல்நாத்திடம் நலம் விசாரித்தார். மேலும்
இது தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கு அவர் அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலூஜா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் பாதுகாப்பில் உள்ள அக்கறையின்மையை எடுத்துரைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே தான் ஹனுமனின் கருணையால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருப்பதாக கமல் நாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Published by:Arun
First published: