Home /News /national /

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல்

நரிக்குறவர் சமூகத்தினர்

நரிக்குறவர் சமூகத்தினர்

Scheduled Tribes list | பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நரிக்குறவர் சமுதாயத்தினர் அதிகளவு வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருப்பதால் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ளனர். எனவே, தங்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நரிக்குறவர் சமூகத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதேபோன்று குருவிக்கார சமூகத்தினரும் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, அனுராக் சிங் தாகூர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய அர்ஜுன் முண்டா, தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் குருவிகார சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.இதேபோன்று கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல்பிரதேச மாநிலங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

    இதன்மூலம் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி