‘மமதா பானர்ஜி மீது தாக்குதல் இல்லை; விபத்து தான்!’ - போலீஸ் விசாரணையில் முதல்கட்ட தகவல்!

மமதா பானர்ஜி

மமதா அருகே அதிகளவிலான மக்கள் கூட்டம் கூடிவிட்டது என்பதால் விபத்து நடைபெற்றிருக்கலாம் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபப்ட்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மமதா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, அதிகளவு கூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்து தான் என தேர்தல் ஆணையத்திற்கு மாநில காவல்துறை அறிக்கை அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் சூடான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனிடையே அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி நேற்று மாலை தான் 4, 5 பேரால் தாக்கப்பட்டதாக கூறியது தேர்தல் களத்தை பரபரப்பில் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. திவிரமான காயங்களுக்கு உள்ளான மமதா, கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்த கையோடு கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி, நந்திகிராமின் பிருலியா பஜாரில் உள்ள கோவில் ஒன்றில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது பொதுமக்கள் கூட்டம் மமதாவை மொய்த்து எடுத்தது. இந்த களேபரத்தில் தன்னை 4 - 5 பேர் தாக்கியதாகவும், கார் கதவை சாத்தியதால் தன்னுடைய காலில் பெரிய காயம் ஏற்பட்டுவிட்டதாகவும் மமதா கூறினார். மேலும் அந்த சமயம் போலீசார் யாரும் என் அருகில் இல்லை என்பதால் இது சதிச் செயலாக இருக்கும் எனவும் அவர் கூறி அதிரவைத்தார். இதனையடுத்து கொல்கத்தாவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே மமதா தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாநில காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து கிழக்கு மிட்னாபூர் மாவட்ட நீதிபதி விபு கோயல், தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு நந்திகிராமின் பிருலியா பஜாரில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தது. அவர்கள் உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மிட்னாபூர் டிஐஜி குனால் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் பிரவீன் பிரகாஷ், கூடுதல் ஆணையர் பார்தா கோஷ் ஆகியோரும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் முதல்கட்ட அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கண்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஆனால் பாதுகாப்பில் சிறிது கவனக் குறைவு ஏற்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிக்கை முழு விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

தற்போது சிசிடிவி காட்சிகள், கண் கண்ட சாட்சியங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. மமதா அருகே அதிகளவிலான மக்கள் கூட்டம் கூடிவிட்டது என்பதால் விபத்து நடைபெற்றிருக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது வீடியோ வெளியிட்டுள்ள மமதா பானர்ஜி, தான் விரைவில் குணமடைந்து திரும்பிவிடுவேன் எனவும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இரண்டு, மூன்று நாட்களில் அவர் திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

மமதா பானர்ஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: