என் சம்மதம் இல்லாமலே என் பெயரை அறிவித்துவிட்டனர்; தேர்தலில் போட்டியிடமாட்டேன் - மேற்குவங்க பாஜக பெண் வேட்பாளர் அதிரடி அறிவிப்பு!

என் சம்மதம் இல்லாமலே என் பெயரை அறிவித்துவிட்டனர்; தேர்தலில் போட்டியிடமாட்டேன் - மேற்குவங்க பாஜக பெண் வேட்பாளர் அதிரடி அறிவிப்பு!

சிகா மித்ரா

வேட்பாளராக அறிவித்தும் சிகா மித்ரா இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜகவுக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
பாஜகவிலும் இணைய மாட்டேன், மேற்குவங்க சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்களும் பாஜகவில் தினந்தோறும் இணைந்து வந்தனர். இந்த நிலையில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் 148 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று பாஜக வெளியிட்டது.

இப்பட்டியல் வெளியான சில நிமிடங்களிலேயே அதில் இடம்பெற்றிருந்த பெண் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலே தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

நேற்று பாஜக வெளியிட்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கொல்கத்தாவின் Chowringhee தொகுதியில் சிகா மித்ரா என்பவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவின் மனைவியாவார்.

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து சிகா மித்ரா கூறுகையில், கண்டிப்பாக தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை. என்னுடைய பெயர் எனது ஒப்புதல் இல்லாமலே சேர்க்கப்பட்டுள்ளது. நான் பாஜகவிலும் சேரப்போவதில்லை என சிகா மித்ரா தெரிவித்துள்ளார்.

வேட்பாளராக அறிவித்தும் சிகா மித்ரா இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜகவுக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன், சிகா மித்ராவின் அறிவிப்பை அடுத்து பாஜகவை கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.

“ஒவ்வொரு முறை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போதும் நீங்கள் ஆம்லெட் செய்யலாம். அவர்கள் முகத்தில் அவ்வளவு முட்டை வழிகிறது” என பாஜகவை கிண்டலடித்துள்ளார்,

முன்னதாக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது ரண்டிதேவ் சென்குப்தா என்பவரை ஹவுரா தக்‌ஷின் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது. ஊகவியலாளரான இவர் பாஜகவில் இணைந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு சீட் தாருங்கள் என நான் கட்சியில் கேட்கவில்லை. அவர்களும் எனக்கு சீட் தருவதாக தகவல் தெரிவிக்கவில்லை. எனக்கு பதிலாக வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்கட்டும். நான் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவேன். ஆனால் தேர்தலில் போட்டியிடமாட்டேன். இது தொடர்பாக கட்சிக்கு தெரிவிப்பேன் என்றார்.
Published by:Arun
First published: