முகப்பு /செய்தி /இந்தியா / சீல் வைக்கப்பட்ட சர்வதேச எல்லை.. கடும் பாதுகாப்பு.. மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

சீல் வைக்கப்பட்ட சர்வதேச எல்லை.. கடும் பாதுகாப்பு.. மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

வாக்குப்பதிவு தொடங்கியது

வாக்குப்பதிவு தொடங்கியது

மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagaland, India

வடகிழக்கில் தலா 60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திரிபுரா மாநிலத்துக்கான தேர்தல் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மற்ற இரு மாநிலங்களுக்கும் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேகாலயா-வில் சோகியோங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 36 பெண்கள் உள்பட 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாகாலாந்தைப் பொறுத்தவரை, அகுலுட்டோ தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 4 பெண்கள் உள்பட 183 பேர் களத்தில் உள்ளனர். மேகாலயாவில் 21 லட்சம் பேரும், நாகாலாந்தில் 13 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்.

மேகாலயாவில் 119 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வங்கதேசம் உடனான மேகாலயாவின் சர்வதேச எல்லையை மார்ச் 2 ஆம் தேதி வரை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சியமைத்துள்ளது. இதனால், ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டுள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வாக்கை செலுத்தி வருகின்றனர்.  இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

First published:

Tags: Election