நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்
நாகாலாந்தில் தீவிரவாதிகள் என்று நினைத்து பொதுமக்கள் 8 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாகலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதற்காக மத்திய அரசு சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் நேற்று மாலை 250 பேர் கொண்ட கும்பல் துணை இராணுவமான அசாம் ரைபிள்ஸ்-க்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தது. அவர்களை விரட்டுவதற்காக அசாம் ரைபிள்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக நாகலாந்து தலைமை செயலர், உயரதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. பதற்றம் அதிகமுள்ள பகுதிக்கு, கூடுதல் துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாகலாந்தில் அமைதியை நிலை நிறுத்துவதற்கான அனைத்து பணிகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும். பாதுகாப்பு படை தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். கூட்டத்தை விரட்டியடிக்க, தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதனால் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தார்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
Also Read : நாகாலந்து துப்பாக்கிச் சூடு- மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மோன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் அறிந்ததும் கிராமத்தினர் ராணுவ முகாமை சுற்றிவளைத்தனர். அப்போது 2 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்தான் சந்தேகத்திற்கிடமான வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார்.
மியான்மர் எல்லைப் பகுதியில் நாகலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதன் எல்லை வழியாக மியான்மரை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி, தாக்க முயலும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் ஊடுருவல்காரர்கள் என நினைத்து, நேற்று மாலை, வாகனம் ஒன்றின் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 13 பேர், பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமித் ஷா விளக்கமும், மத்திய அரசு சார்பாக வருத்தமும் தெரிவித்துள்ளார்.
Also Read : ரஷ்யாவுடன் இணைந்து உத்தர பிரதேசத்தில் AK 203 வகை துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்!
இதற்கிடையே, மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நாகலாந்து முதலமைச்சர் நெய்பி ரியோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'பதற்றம் நிறைந்த பகுதி என்று கூறி, ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நாகலாந்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் இங்குள்ள அனைத்து ஆயுதக்குழுக்களும் சண்டை நிறுத்தத்தை அறிவித்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றன. அப்படி இருக்கையில் எதற்காக இந்த சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டும்?
பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கிறது. இதனை நீக்க வேண்டும் என்று பெரும்பான்மையோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா ஜனநாயக நாடு என்பதை மறந்துவிடக் கூடாது' என்று கூறியுள்ளார்.
நாகலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA)நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.