ஹைதராபாத் அருகே வானில் பறந்த மர்ம பொருளைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளன என நினைத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விகராபாத் மாவட்டத்தில் மார்பள்ளி கிராமத்தில் மர்ம பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் அந்தப் பொருள் விழுந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்த பொதுமக்கள் அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளதாக வதந்தி பரவவும் , அந்த மர்ம பொருளை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மார்பள்ளி கிராமத்தில் திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மர்ம பொருளை பொதுமக்கள் நெருங்கிவிடாமல் தடுக்கப்பட்டது. ஆந்திரா மாநிலத்தில் மர்ம பொருள் பறக்கும் வீடியோவும், அந்த பொருள் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முதல்கட்ட தகவல்களை சேகரித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்த மர்ம பொருள் ஒரு ஹீலியம் பலூன் எனத் தெரியவந்தது.இதையடுத்து பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஹீலியம் பலூன் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஹீலியம் பலூனில் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பொருட்கள் இருந்ததாகவும். அவற்றைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், அந்த பலூன் புவியின் மேற்பரப்பு ஆராய்சிக்காக அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்தது.
Read More : தெறி ரீமேக்கில் நடிக்க வேண்டாம்... பவான் கல்யாணுக்கு தற்கொலை கடிதம் அனுப்பிய ரசிகர்
இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய பிஎஸ்ஐ (planetary Society of India) அமைப்பின் தலைவர் ரகுநந்தன், இந்த ஹீலியம் பலூன் டிஎஃப்ஐஆர்( Tata institute for Fundamental Research) மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாக வானில் பறக்கவிடப்பட்டதாகவும், இந்த பலூனில் இருக்கும் நவீன உபகரணங்கள் மூலம் புவியின் மேற்பரப்பில் நிலவும் காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை, காற்றழுத்தம் ஆகியவற்றை கண்காணித்து பருவநிலை மற்றும் வானிலை மாற்றங்களை கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தை மையமாக கொண்டுள்ள தேசிய பலூன் ஆராய்ச்சிக் கழகம் மூலம் இந்த பலூன் பறக்கவிடப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பலூன் கீழே விழுந்தது தொடர்பாக தேசிய பலூன் ஆராய்ச்சிக் கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் பலூனையும், அதில் இருந்த ஆராய்ச்சி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வானில் திடீரென மர்ம பொருள் பறந்து வந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hyderabad