போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறார்கள் - பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி

போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  என்னுடைய போன் உரையாடல்கள்  ஒட்டுக்கேட்கின்றனர் என பா.ஜ.கவினர் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

  மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடந்து வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு தான் இப்போது நேரடி போட்டி வருகிறது. தேர்தல் அறிவித்ததில் இருந்து பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் போக்கு இருந்தது. 4-ம் கட்ட வாக்குப்பதிவுகளில் வன்முறை வெடித்து துப்பாக்கிச்சூடு நடந்தது. பாஜக வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்களை இறக்கியுள்ளது என மம்தா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். பிரச்சார மேடைகளில் பாஜவையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தொடர்ந்து கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

  மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ம் தேதி வீட்டுக்கு சென்றுவிடுவார்.  மம்தாவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ விவகாரம் வெளியாகி மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் போனை பாஜக ஒட்டுக்கேட்பதாக தேர்தல் பரப்புரையில் மம்தா பேசியுள்ளார். “ பாரதிய ஜனதா கட்சியினர் எங்களது தொலைபேசியை ஒட்டுக்கேட்கின்றனர். சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளின் போது எங்களது அழைப்புகளை ஒட்டுக்கேட்கின்றனர். இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவேன். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் எவரையும் நான் விட்டுவைக்க மாட்டேன்.

  இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். சில ஏஜென்சிகளுடன் இதுபோன்ற செயல்களில் மத்திய படைகள் ஈடுபட்டுள்ளன என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. பாஜக இதற்கு பின்னால் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்களோ தங்களுக்கும் இதற்கும் எந்தப் பங்கும் இல்லை என்று கூறுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: