மகாராஷ்டிரா அரசியிலில் குழப்பமான சூழல் நிலவிவரும் நிலையில், சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனாவை விட்டு வெளியேறுவதை விட சாவதே மேல் என்று கூறியவர்கள் இன்று ஓடி விட்டதாக ஆதங்கம் தெரிவித்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சியை உடைக்க நினைப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் தாம் செய்ததாகவும் உத்தவ் தாக்கரே உருக்கமாக குறிப்பிட்டார்.
கட்சி நிர்வாகிகள் உடன் மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்ரே, சிவசேனா மூலமாக அமைச்சர் பதவி, தங்கள் மகனுக்கு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததாகவும், தனது மகன் மட்டும் அரசியலில் ஈடுபட்டு வளர்ச்சியடையக் கூடாதா என்றும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இக்கட்டான சூழலிலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடனிருப்பதாக பாராட்டிய அவர், சொந்த மக்களே தன்னை முதுகில் குத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'நான் பயனற்றவன், தகுதியற்றவன் என நினைத்தால் கூறுங்கள், கட்சியில் இருந்து விலகவும் நான் தயார். தற்போதைக்கு முதலமைச்சர் இல்லத்தை விட்டு தான் நான் வெளியேறியிருக்கிறேன், களத்தில் இருந்து வெளியேறவில்லை’ என்றும் கட்சி நிர்வாகிகள் இடையே, உத்தவ் தாக்ரே பேசினார். அதைதொடர்ந்து, சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிக்கலில் சிவசேனா.. மகாராஷ்டிராவில் என்ன தான் நடக்கிறது - முழு விவரம்
முன்னதாக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மகாராஷ்டிரா துணை சபாநாயகரிடம், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மனு அளித்தார். அதனடிப்படையில், 16 எம்.எல்.ஏக்களுக்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டு, அதன் மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் தங்களிடம் 50 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளதால், கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shiv Sena, Uddhav Thackeray