• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரெய்டு என்ற பெயரில் போலீசார் என் கணவரை அடித்துக் கொன்றுவிட்டு கொலையை மறைத்துள்ளனர் - மனைவி கண்ணீர்.. நடந்தது என்ன?

ரெய்டு என்ற பெயரில் போலீசார் என் கணவரை அடித்துக் கொன்றுவிட்டு கொலையை மறைத்துள்ளனர் - மனைவி கண்ணீர்.. நடந்தது என்ன?

Gorakhpur murder

Gorakhpur murder

  • Share this:
தொழிலதிபர் ஒருவர் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவரை சோதனை என்ற பெயரில் வந்த போலீசார் அடித்துக் கொலை செய்து ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் கொலையை மறைத்துவிட்டதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்தவரின் மனைவி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 38 வயதாகும் மனிஷ் குப்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர், தனது நண்பர்கள் சிலருடன் கோரக்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாயன்று அதிகாலை, அவர் மதுபோதையில் அடிபட்டு இறந்துவிட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில், அந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் அரங்கேறியிருக்கிறது. ரெய்டு என்ற பெயரில் நள்ளிரவில் அத்துமீறி ஓட்டல் அறைக்குள் நுழைந்த காவலர்கள், தொழிலதிபர் மனிஷ் குப்தாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அவரை அடித்துக் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவாகியிருக்கிறது.

நடந்தது என்ன?

கான்பூரைச் சேர்ந்த மனிஷ் குப்தா, கோரக்பூரில் உள்ள அவரின் நண்பரான சந்தன் சைனி என்பவரின் அழைப்பை ஏற்று, குருக்கிராமைச் சேர்ந்த ஹர்தீப் சிங், சவுகான் ஆகிய நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கோரக்பூருக்கு கடந்த திங்களன்று காலை வந்து ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். மனிஷின் நண்பர் சந்தன் சைனி திங்களன்று மாலை மனிஷ் குப்தா தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நண்பர்களுடன் பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டிருக்கிறார். அடுத்த நாள் காலை உள்ளூரில் உள்ள சில சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என அவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.

Also Read:   ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

இந்நிலையில் திங்களன்று நள்ளிரவில், சந்தேகத்துக்கிடமானவர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்பதை அறிய காவலர்கள் அந்த ஓட்டலுக்கு வந்து மனிஷ் தங்கியிருந்த அறையை தட்டி அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது காவலர்கள் நள்ளிரவில் அத்துமீறி சோதனை செய்த முறை காரணமாக மனிஷ் மற்றும் நண்பர்களுக்கும், காவல் அதிகாரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த களேபரத்தில் மனிஷை அங்கிருந்த காவலர்கள் அடித்துக் கொலை செய்ததாகவும், அவரின் தலையில் ரத்த காயத்துடன் மனிஷை அந்த அறையை விட்டு இழுத்து வந்ததை பார்த்ததாகவும் ஹர்தீப் சிங் கூறியிருக்கிறார். பின்னர் மனிஷின் கொலையை மறைக்க அவர் குடித்துவிட்டு மதுபோதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக ஜோடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மனிஷின் மரணம் குறித்து அறிந்து கோரக்பூர் வந்தடைந்த அவரின் மனைவி மீனாட்சி, காவலர்கள் தனது கணவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். ஓட்டல் ஊழியர்கள் ரத்த கறையை துடைத்து கொலையை மறைக்க உதவியிருக்கிறார்கள். என் கணவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் என கண்ணீருடன் கூறினார்.

Also Read:  ₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் – எப்படி சாத்தியமானது? – ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

மனிஷின் குடும்பத்தினர் கூறுகையில், இந்த கொலை விசாரணையை கான்பூருக்கு மாற்ற வேண்டும், மனிஷ் மரணத்துக்கு இழப்பீடாக 50 லட்ச ரூபாயும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் மனிஷ் மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றிய கோரக்பூர் மாவட்ட எஸ்.பி, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய காவலர்களை தேடி வருவதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: