அசாம் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மான தெரிவித்துள்ளார். இந்த பெரும் மாற்றமானது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், "அசாம்-வங்கதேச எல்லையில் உள்ள மாவட்டங்களின் மக்கள்தொகை எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக உள்ளது. இந்த புள்ளி விவரத்தின் படி, இந்த மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெளிவாக தெரிகிறது. எல்லையோர மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுவதை நான் நீண்ட காலமாக கூறிவருகிறேன்.
அசாம்-வங்கதேச எல்லை மட்டுமல்லாது, மேற்கு வங்கம்- வங்கதேசம், மேற்கு வங்கம் - நேபாளம் ஆகிய எல்லை மாவட்டங்களிலும் இந்த மக்கள் தொகை எண்ணிக்கை உயர்வு அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய அளவில் இஸ்லாமியர்கள் மக்கள்தொகை வளர்ச்சி 12.5 விழுக்காடாக உள்ள நிலையில், எல்லை மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 31.45 சதவீதமாக உள்ளது. இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று கேள்வி எழுப்புவதை விட, இந்த பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இந்த பகுதிகளில் காவல்துறை விஞ்ஞானப்பூர்வமான புள்ளி விவரங்களை திரட்டி அதற்கேற்ப செயல்பட வேண்டும்" என்றார்.
மேலும், அசாமின் எல்லையோர மாவட்டங்களில் ஐந்து பயங்கரவாத சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் ஹிமந்தா, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புகலிடமாக அசாம் உருவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். முன்னதாக நேற்று அம்மாநிலத்தின் மோரிகவோன் மாவட்டத்தில் முப்தி முஸ்தபா என்பவர் நடத்திய மதராசா பள்ளியை இடித்து அங்கு படித்த 4 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் அம்மாநில அரசு சேர்த்துள்ளது. முப்தி முஸ்தபா அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசாம் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை கூறுகின்றது.
இதையும் படிங்க:
ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை... கொட்டும் மழையில் மகன் உடலை தோளில் சுமந்து 2 கி.மீ. நடந்த தந்தை
கடந்த மார்ச் மாதத்தில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை குறித்து முதலமைச்சர் ஹிமந்தா, அசாம் மாநிலத்தில் தற்போது இஸ்லாமியர்கள் மக்கள்தொகை 35 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கையில் அவர்கள் உள்ளதால் அவர்களை எவ்வாறு சிறுபான்மையினர் என்று அழைப்பது என கருத்து தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.