உத்தரப் பிரதேச மாநிலம் அல்வால் பகுதியைச் சேர்ந்த பெண் பூஜா, இவரின் தந்தை கோவிட் பெருந்தொற்று முதல் அலையின் போது நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பூஜாவின் உறவினர் ராஜேஷ் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். ஏப்ரல் 22ஆம் தேதி திருமணம் தேதியாக நிச்சயிக்கப்பட்ட நிலையில், பொருளாதார வசதியில்லாததால் ராஜேஷால் திருமண மண்டபம் ஏற்பாடு செய்ய வசதியில்லை. வீடும் மிக சிறியதாக இருப்பதால் திருமணத்தை எவ்வாறு நடத்துவது என ராஜேஷ் தவித்துள்ளார்.
இந்த விஷயம் ராஜேஷின் அண்டை வீட்டாரான பர்வேஸ் என்பவருக்கு தெரியவந்துள்ளது. இஸ்லாமியரான பர்வேசும் பூஜாவின் குடும்பத்தினரும் நீண்டகாலம் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். ராஜேஷின் தவிப்பை உணர்ந்த பர்வேஸ் தனது சொந்த வீட்டிலேயே திருமணம் விழாவை நடத்திக்கொள்ளுங்கள் என தாமாக முன்வந்து உதவியுள்ளார்.
பூஜாவின் வீட்டினருடன் சேர்ந்து அனைத்து திருமண வேலைகளில் பர்வேஸ் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருமணத்தன்று பர்வேஸ் அவரது குடும்பத்தினர் மணமேடையில் நின்று அனைவரையும் வரவேற்று உபசரித்துள்ளனர். அத்துடன் பர்வேஸ் வீட்டு பெண்கள் திருமண விழாவில் பாட்டு பாடி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
பூஜாவுக்கு திருமண விருந்து அளித்து மட்டுமல்லாது, பெண்ணுக்கு தங்க சங்கிலி ஒன்றை திருமண பரிசாக பர்வேஸ் அளித்துள்ளார். பர்வேஸ்சின் இந்த செயலால் நெகிழ்ச்சியடைந்த ராஜேஷ்,"எங்களின் தேவையை அறிந்து பர்வேஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் வீட்டையே தந்து உதவி செய்தனர். தனது சொந்த மகளின் திருமணத்தைப் போல் பூஜாவின் திருமணத்தை அவர்கள் நடத்தி வைத்தனர்"என்றார்.
இது குறித்து பர்வேஸின் மனைவி நதீரா கூறுகையில், "பூஜாவும் அவரது தாயாரும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்கள். அவர்களை எங்கள் வீட்டு உறுப்பினர்களைப் போலவே கருதுகிறோம். பூஜா எங்கள் மகளை போன்றவர். எங்களால் முடிந்த உதவியைத் தான் நாங்கள் செய்துள்ளோம். இந்த புனித ரம்ஜான் மாதத்தில் ஒரு மகளின் திருமணத்திற்கு என்ன செய்ய முடியுமே அதை செய்துள்ளோம். நாம் வேறு நம்பிக்கை வேறு கடவுளை வழிபடுபவர்களாக இருக்கலாம். ஆனால் மனிதர்களான நாம், நமது பெண் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது கடமையாகும். அதுதான் எல்லாவற்றையும் விட பெரியது. அதைத்தான் நாங்கள் செய்தோம்" என்றார்.
இதையும் படிங்க:
இந்த தலைமுறை இளைஞர்கள் கஷ்டங்களைச் சந்திக்கப் போவதில்லை - ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி உறுதி
நாடு முழுவதும் மத ரீதியான மோதல்கள் சமீப காலமாக நடைபெறும் நிலையில், இது போன்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.