ஹெராயின் கடத்தலில் அதானி துறைமுகத்துக்கு லாபம்? விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
ஹெராயின் கடத்தலில் அதானி துறைமுகத்துக்கு லாபம்? விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
மாதிரிப் படம்
ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வெகு தொலைவில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு ஹெராயின் அடங்கிய கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத்தில் உள்ள அதானி முந்த்ரா துறைமுகத்தில் ஹெராயின் பிடிபட்ட சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஹெராயின் கடத்தல் சம்பவத்தில் அதானி முந்த்ரா துறைமுகம் எதாவது பலன் பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,990 கிலோ ஹெராயின் கடந்த 16ம் தேதி பிடிபட்டது. இந்த ஹெராயின் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஹெராயின் பிடிபட்ட வழக்கு தொடர்பாக குஜராத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோவையை சேர்ந்த ராஜ்குமாரை காவலில் வைப்பது தொடர்பான மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி சி.எம்.பவார், “ அதானி முந்த்ரா துறைமுகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம். போதைப்பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதன் மூலம் முந்த்ரா துறைமுக நிர்வாகமோ, அதிகாரிகளோ ஏதேனும் லாபம் பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் இத்தகைய கொள்கலன்கள்(Container) மற்றும் சரக்குகளை சோதனை செய்வதற்கு வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் முந்த்ரா துறைமுகத்தில் பின்பற்றப்படும் முறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை துறைமுகம் போன்றவை அருகிலேயே இருக்கும்போது, “ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வெகு தொலைவில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு ஹெராயின் அடங்கிய கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டது ஏன், என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த சம்பவத்தில் கேள்வி எழுவதாகவும் இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதேபோல் குஜராத் கடல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் பொருட்கள் இறக்குமதி/கடத்துவதற்கான மையமாக மாறியுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.