முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவின் காற்று மாசுமிக்க நகரங்களில் டெல்லியை பின்னுக்குத் தள்ளிய மும்பை!

இந்தியாவின் காற்று மாசுமிக்க நகரங்களில் டெல்லியை பின்னுக்குத் தள்ளிய மும்பை!

மும்பை காற்று மாசு

மும்பை காற்று மாசு

காற்று மாசில் மிக மோசமான நிலைக்கான தரவரிசையில் மும்பை நகரானது கடந்த ஜனவரி 29ஆம் தேதி 10வது இடத்தைப் பிடித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

காற்றின் தர கண்காணிப்பான சுவிஸ் ஏர் டிராக்கிங் இன்டெக்ஸ் IQAir-ன் சமீபத்திய அறிக்கையின்படி, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரையிலான ஒருவார காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மாநகர் இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாகவும், உலகளவில் இரண்டாவது மாசுபட்ட நகரமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசில் மிக மோசமான நிலைக்கான தரவரிசையில் மும்பை நகரானது கடந்த ஜனவரி 29ஆம் தேதி 10-வது இடத்தைப் பிடித்தது. அதேபோல், பிப்ரவரி 2 அன்று மும்பை மாநகரம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதற்கு அடுத்த நாட்களில் காற்று மாசு சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், பிப்ரவரி 8 அன்று அது மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிப்ரவரி 13 அன்று மும்பை, இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறி தலைநகர் டெல்லியை பின்னுக்குத் தள்ளியது. அதுமட்டுமின்றி, காற்றின் தரத்தில் உலகளவில் இரண்டாவது மிகவும் மோசமான நகரமாக மும்பை மாறியுள்ளது.

மும்பை காற்றின் தரம்:

CPCB தரவுகளின்படி, மும்பையில் கடந்தாண்டு நவம்பர் முதல் இந்தாண்டு ஜனவரி வரையிலான மோசமான மற்றும் மிகவும் மோசமான நாட்கள் முந்தைய மூன்று குளிர்காலங்களில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மற்றும் மும்பை ஐஐடி ஆகியவற்றின் 2020ஆம் ஆண்டின் ஆராய்ச்சியின்படி, மும்பையின் காற்றில் 71 சதவீதத்துக்கும் அதிகமான காற்று மாசுக்கு கட்டுமான தூசியே காரணம் என கூறப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கழிவுக் கிடங்குகள் ஆகியவை மும்பையின் காற்றை சுவாசிக்க மிகவும் அசுத்தமாக மாற்றுவதில் முக்கிய பங்களித்ததாக தரவுகள் கூறுகின்றன.

IQAir என்றால் என்ன?

IQAir, சுவிஸ் ஏர் டிராக்கிங் இன்டெக்ஸ் மற்றும் உலகளாவிய காற்றின் தர மானிட்டர், UNEP மற்றும் Greenpeace உடன் ஒருங்கிணைத்து, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவைப் பயன்படுத்தி இந்தியாவில் காற்றின் தரத்தை அளவிடுகிறது. அமெரிக்க காற்று தரக் குறியீட்டு (AQI) தரநிலைகளின்படி, நகரங்கள் ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற மற்றும் அபாயகரமான என வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை இந்தியாவை விட மிகவும் கடுமையானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 10 நகரங்கள்:

லாகூர் (பாகிஸ்தான்)

மும்பை (இந்தியா)

காபூல் (ஆப்கானிஸ்தான்)

காஹ்சியுங் (தைவான்)

பிஷ்கெக் (கிர்கிஸ்தான்)

அக்ரா (கானா)

கிராகோவ் (போலந்து)

தோஹா (கத்தார்)

அஸ்தானா (கஜகஸ்தான்)

சாண்டியாகோ (சிலி)

First published:

Tags: Air pollution, Delhi, Mumbai