ஹோம் /நியூஸ் /இந்தியா /

முல்லை பெரியாறு அணை : கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை : கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முல்லை பெரியாறு அணையில் இருந்து நள்ளிரவில் திடீரென தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டி கேரளாவில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், முல்லை பெரியாறு அணையை செயலிழக்கச் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர் தேக்க அளவான 142 அடியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பெரியாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திடீரென நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  மேலும், தமிழக அரசைக் கண்டித்து கேரளாவில் இடுக்கி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வண்டிப் பெரியாறு காவல்நிலையத்திற்கு பேரணியாக சென்று புகார் அளித்தனர்.

  இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாதுகாப்பான அளவில் தண்ணீரை, தமிழக அரசு திறந்துவிட அறிவுறுத்தும்படி முல்லைப்பெரியாறு மேற்பார்வைக் குழுவுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் ஜாய் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 30ம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 9 ஷட்டர்கள் வழியாக 5 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வண்டிப்பெரியாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் உள்ளதாகவும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், முல்லை பெரியாறு அணையில் நீர் வெளியேற்ற அளவையும், நீர் சேமிப்பையும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தமிழகம் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதேபோன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் இன்றி முல்லை பெரியாறு அணையில் நீரை திறந்து விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

  எனவே, போதிய முன்னறிவிப்பு செய்துவிட்டு அணையில் இருந்து பகல் நேரத்தில் தண்ணீரை திறக்க வேண்டும் என்றும், கரையோரம் வசிக்கும் மக்களின் கவலை மற்றும் அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், காலநிலை மாற்றத்தை இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழகத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

  இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விளக்கமளித்தார். இதற்கிடையே, கேரளாவில் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட எந்த அணையையும் செயலிழக்கச் செய்யும் திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.

  Must Read : ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

  வடிவமைப்பிலும், புவியியல் ரீதியிலும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாகவும், பலமாகவும் உள்ளதாகவும், மத்தியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் உச்சநீதிமன்றமும் 2014ம் ஆண்டு இதை உறுதி செய்துள்ளது என்றும் மத்திய ஜல்சக்தி இணையமைச்சர் பிஷ்வேஷ்வர் துடு கூறியுள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Durai murugan, Mullai Periyar Dam, Pinarayi vijayan