தினத்தந்தி நாளிதழ் மற்றும் யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் தினத்தந்தி கோடை விழா- 2022 கோலப் போட்டி உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோலங்களைப் பார்வையிட்டு பின்னர் சிறப்பாக வரையப்பட்ட கோலங்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கோலப் போட்டியில் துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உருவத்தையே ஒரு பெண் கோலமாக வரைந்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியில், தினத்தந்தி புதுச்சேரி கிளை மேலாளர் மாரியப்பன், விற்பனை மேலாளர் விஜயன், யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷணராஜு, பெத்தி செமினார் பள்ளி தலைமை ஆசிரியர் ரெவரண்ட் பாஸ்கல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கிப் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ‘பெண்கள் அழகாவும் அறிவுபூர்வமாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கோலம் வரைய தேர்ந்தெடுத்த கருப்பொருள் உணர்த்துகிறது. நெகிழி இல்லாத உலகத்தை உருவாக்க முயற்சிகள் செய்து வரும் யுவர் பேக்கர்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை மனதார பாராட்டுகிறேன். தினத்தந்தி குழுமம் பல வகைகளில் மக்களுக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தமிழிசை சௌந்தர்ராஜன்
பெண்கள் இருந்தாலே அந்த இடம் பிரம்மாண்டமாக இருக்கும். பெண்களின் தியாகத்தில் தான் குடும்பம் என்ற சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா உடற்பயிற்சி செய்யும்போது உடலும் மனதும் பலமாக இருக்கும். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட பிரதமர் யோகா பற்றி குறிப்பிட்டார்.
பெண்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் நலமும் பாதிக்கப்படும். பெண்கள் இதனை உணர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் பொருளாதரத்தில் முன்னேறினால் அது பலத்தை தருகிறது. பிரதமர் ஆத்மா நிர்பர் பாரத் என்று கூறுகிறார். பெண்கள் ஏதாவது ஒரு கைவினை அல்லது கைத்தொழில் தெரிந்து கொள்ள வேண்டும். அது பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். எல்லோரும் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக போகவில்லை என்று துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.